விருதுநகர்: மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் பட்டாசு உற்பத்தி ஆலைகளில் ஏற்படும் வெடி விபத்துக்களைக் குறைப்பது மற்றும் அரசு விதிமுறைகளுக்குட்பட்டு பட்டாசு உற்பத்தி செய்யப்படுவதை உறுதி செய்வது தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி, ஏற்கனவே வழங்கப்பட்ட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் நடப்பிலுள்ள அரசு விதிமுறைகளுக்கு முரணாக செயல்படும் பட்டாசு ஆலைகளை கண்காணிக்க சிறப்பு ஆய்வுக் குழுக்களை அமைத்தார்.
அதன் படி ஆய்வு குழுவினர் பட்டாசு ஆலைகளில் ஆய்வு மேற்கொண்ட போது, உள்குத்தகை மற்றும் அதிக அளவிலான பட்டாசு பொருட்கள் இருப்பு வைத்திருந்தது உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்களில், 14 பட்டாசு ஆலைகள் ஈடுபட்டிருந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து விமீறல்களில் ஈடுபட்ட பட்டாசு தொழிற்சாலைகளின் உரிமங்கள் தற்காலிக நிறுத்தம் செய்து, ஆலைகளுக்கு சீல் வைக்க மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.
மேலும், "விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலைகள் அனைத்தும், பட்டாசு ஆலைகள் உரிமதாரர்களால் மட்டுமே நடத்தப்பட வேண்டும். உரிமதாரர்கள் தங்களது பட்டாசு தொழிற்சாலைகளை விதிமுறைகளுக்கு முரணாக வேறு நபர்களுக்கு உள்குத்தகைக்கு விடக் கூடாது.
பட்டாசு ஆலைகளை கண்காணிக்கும் சிறப்பு ஆய்வுக் குழுவினரின் ஆய்வின் பொழுது, உள்குத்தகை விடப்பட்டது கண்டறியப்பட்டால் இனி வரும் காலங்களில் மேற்படி பட்டாசு தொழிற்சாலை உரிமையாளர்கள் மீதும், உள் குத்தகை நடவடிக்கையில் ஈடுபட்டோர் மீதும் கடுமையான குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
அதுமட்டுமின்றி மேற்படி ஆலைகளின் உரிமங்கள் நிரந்தரமாக ரத்து செய்வதுடன், ஆலை உரிமதாரர்கள் மற்றும் குத்தகைதாரர்கள் பட்டாசு உற்பத்திக்கான உரிமங்கள் பெறுவதிலிருந்து நிரந்தரமான தடை உள்ளிட்ட மிகக் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என மாவட்ட ஆட்சித் தலைவர் மேகநாதரெட்டி அறிக்கையின் வாயிலாக தெரிவித்து உள்ளார்.
இதையும் படிங்க: Erode East By Election: அதிமுக சார்பில் கே.எஸ்.தென்னரசு போட்டி: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு