தமிழ்நாட்டில் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர் ஒன்றியம், அருப்புக்கோட்டை ஒன்றியம் ஆகியவற்றில் இணைந்த ஒன்பதாவது வார்டில் அதிமுக சார்பில் வெங்கடேசன் என்பவரும், திமுக சார்பில் பாலச்சந்தர் என்பவரும் வேட்பாளராக போட்டியிட்டனர்.
நேற்றுமுதல் பாதி வாக்கு எண்ணிக்கை அருப்புக்கோட்டையில் நடைபெற்றது. இதில் திமுக வேட்பாளர் பாலச்சந்தர் 634 வாக்குகள் முன்னிலைப் பெற்றார். இதையடுத்து விருதுநகர் ஒன்றியத்தில் இரண்டாவது பாதி வாக்கு எண்ணிக்கையில் அவர் ஆயிரத்து 440 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
இதற்கு அதிமுக வேட்பாளர், நிர்வாகிகள் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்ததாகக் கூறி தேர்தல் நடத்தும் அலுவலரை சந்திக்க முயன்றனர். காவல் துறையினர் அவர்களைத் தடுத்ததால் காவல் துறைக்கும் அதிமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பெருமாள் அதிமுகவினரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு தேர்தல் நடத்தும் அலுவலரை சந்திக்க அனுமதி அளித்தார்.
இதையும் படிங்க: இன்றைக்குள் அனைத்து நிலவரங்களையும் வெளியிட முயல்வோம் - தேர்தல் ஆணையம்