இந்தியா முழுவதும் கடந்த 50 நாட்களுக்கு மேலாக கரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் மாநிலத்தில் பல்வேறு பகுதியில் உள்ள குடிபெயர்ந்த தொழிலாளர்கள் வேலையின்றி மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் பல்வேறு மாநிலங்களில் சிக்கியுள்ள குடிபெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்ப மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளன.
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று (மே 24) வரை 2 கட்டமாக 663 குடிபெயர்ந்த தொழிலாளர்கள் சிறப்பு ரயில் முலம் பிகாருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து இன்று 3ஆம் கட்டமாக தனியார் ஆலைகள், சாலையோரம் வியாபாரம் செய்து வந்த 217 குடிபெயர்ந்த தொழிலாளர்கள், 6 சிறப்பு பேருந்துகள் மூலம் மதுரை ரயில் நிலையத்திற்கு புறப்பட்டுச் சென்றனர். குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கண்ணன் அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். இவர்கள் மதுரை ரயில் நிலையத்தில் இருந்து சிறப்பு ரயில் மூலம் ஜார்க்கண்ட் புறப்பட்டுச் செல்கின்றனர்.
அதேபோல் சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பாக ஒடிசா செல்லும் சிறப்பு ரயிலில் 3 மாவட்டங்களைச் சேர்ந்த 800 வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டனர். இதனை மாவட்ட ஆட்சியர் ராமன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது வடமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அவர்களுக்கு தேவையான உணவு, கிருமி நாசினி, முகக் கவசம் உள்ளிட்டவற்றை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
இதையும் படிங்க: ஊருக்குச் செல்ல பணமில்லை, வருமானம் இல்லாமல் குடும்பத்தினர் தவிக்கின்றனர்'- வேதனையில் வடமாநில தொழிலாளர்கள்