விருதுநகர்: திருச்சுழி தொகுதி திமுக வேட்பாளர் தங்கம் தென்னரசுவை ஆதரித்து அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் காரியாபட்டி பகுதியில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது, "கடந்த மக்களவைத் தேர்தலில் திமுகவை எப்படி வெற்றி பெறச் செய்தீர்களோ அதேபோல இந்தச் சட்டபேரவைத் தேர்தலிலும் திமுகவை வெற்றிபெற செய்யவேண்டும். ரூ. 500, ரூ. 1000 நோட்டுகள் செல்லாது என்று மோடி அறிவித்தபோது பலர் தங்கள் பணத்தை எடுக்க நீண்ட வரிசையில் நின்று உயிரிழந்தனர். ரூபாய் நோட்டு செல்லாது என அறிவித்த பாஜகவை செல்லா காசாக்க வேண்டும்.
தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய ரூ. 15, 000 கோடி ஜிஎஸ்டி தொகையை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு வழங்கவில்லை. கேட்டால் பணம் இல்லை என மத்திய அரசு கூறுகிறது. ஆனால், மோடி ஊர் சுற்ற 8,000 கோடியில் விமானம் வாங்கப்படுள்ளது. நம் அனைத்து உரிமைகளையும் பாஜக அரசு பறிக்கிறது. நீட் தேர்வு கொண்டுவந்ததால் அனிதா தொடங்கி 14 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். திமுக ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று நம் தலைவர் கூறியுள்ளார்.
அனைத்து உயர் கல்வி படிப்பில் சேரவும் நுழைவுத் தேர்வு கொண்டுவர உள்ளதாக மத்திய அரசு கூறுகிறது. நம் பிள்ளைகள் படித்து முன்னேறி விடக்கூடாது என்பதற்காக இவ்வாறு செயல்படுகிறது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா எப்படி இறந்தார் என்பது இன்று வரை சந்தேகத்திற்குரியதாகவே உள்ளது. ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனையிலிருந்த அனைத்து சிசிடிவி கேமராக்களும் செயல்படவில்லை என்று கூறுகின்றனர். இதிலிருந்தே அவர் மரணத்தில் மர்மம் இருக்கிறது என்பது உண்மையாகிறது.
திமுக ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் வெளிகொண்டு வரப்படும் என்று நம் தலைவர் கூறியுள்ளார். அதிமுக கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி. அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் பட்டியலை ஆளுநரை சந்தித்து பாமக கட்சியினர்தான் கொடுத்தனர். ஆனால், இன்று அவர்களுடனே கூட்டணி வைத்துள்ளனர்.
அதிமுகவுக்கு நீங்கள் போடும் ஒவ்வொரு ஓட்டும் பாஜகவுக்கு போடும் ஓட்டு. இந்தப் பகுதியில் நூலகம் அமைத்தது, ஆரம்ப சுகாதார நிலையம் கொண்டுவந்தது, குடிநீர் பிர்ச்னையை தீர்த்தது தங்கம் தென்னரசுதான். குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகை, பெட்ரோல், டீசல் விலையை 5 ரூபாய் வரை குறைக்க நடவடிக்கை, சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு கூடுதலாக ரூ. 100 மானியம் உள்ளிட்டவை திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது" என்றார்.
இதையும் படிங்க: ஜெயலலிதா இறப்பிற்கு திமுகதான் காரணமா? - உதயநிதி கேள்வி