விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தென்திருப்பதி என்று அழைக்கப்படும் திருவண்ணாமலை ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இங்கு வருடா வருடம் புரட்டாசி மாதம் பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
இதில் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளிலிருந்து பல்லாயிரக்கணக்கானோர் வருகைதந்து சாமி தரிசனம் செய்வர். இதற்கிடையில் புரட்டாசி மாதம் வாரத்தின் முதல் சனிக்கிழமையான கடந்த 19ஆம் தேதி 19,500 பேர் சாமி தரிசனம் செய்தனர்.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் கோயிலுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் கோயில் அடிவாரப் பகுதியில் சுகாதாரத் துறை சார்பாக அமைக்கப்பட்ட கரோனா பரிசோதனை முகாமில் விருப்பமுள்ளவர்கள் பரிசோதனை செய்தனர். மொத்தம் 350 பேருக்குப் பரிசோதனை செய்ததில் வத்திராயிருப்பு, சாத்தூர் பகுதியைச் சேர்ந்த 2 பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்த அனைவரும் தானாக முன்வந்து கரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறு சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.