தமிழ்நாடு அரசு கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதல் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதற்கு தடை விதித்திருந்தது. இவற்றை நடைமுறைப்படுத்த தமிழ்நாடு முழுவதும் நகராட்சி, மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்ப்டடுவருகின்றன. அதன் ஒருபகுதியாக விருதுநகர் மாவட்டத்தில் நகராட்சி ஊழியர்கள் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக, கடைகள், வணிக நிறுவனங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவது குறித்து சோதனை செய்துவருகின்றனர்.
இந்நிலையில், இதுகுறித்து நகராட்சி ஆணையர் பார்த்தசாரதி ஈடிவி பாரத் செய்திகளுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில்,
"கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக விருதுநகர் பகுதி முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளோம். குறிப்பாக, மூன்று முக்கிய பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்களை கண்டறிந்து அவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என தண்டனை விதித்துள்ளோம். சிறு வியாபாரிகளை பொறுத்தவரையில் பிளாஸ்டிக் பயன்பாடு குறைந்துள்ளது. ஆனால், மொத்த வியாபாரிகள் பெரும்பாலும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திவருகின்றனர். அவற்றை தடுக்க ஒவ்வொரு கிடங்குகளிலும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். கூடிய விரைவில், விருதுநகர் நகராட்சி பிளாஸ்டிக் அல்லாத நகராட்சியாக மாற்றுவோம்" என நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், "கடைகள், வணிக நிறுவனங்களில் இரண்டாவது முறையாக பிளாஸ்டிக் பொருட்கள் கண்டறியப்பட்டால் 50 ஆயிரம் அபராதமும் மூன்றாவது முறை கண்டறியப்பட்டால் தொழில் செய்யும் உரிமை முழுவதுமாக ரத்து செய்யப்படும்" என்றும் எச்சரிக்கை விடுத்தார். இதனிடையே, நகராட்சி ஊழியர்கள் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஆறு டன்னிற்கும் அதிகமான பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.