விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் வளாகத்திலுள்ள மணவாளமாமுனிகள் மடத்தில் சடகோப ராமானுஜ ஜீயரை, பால்வளத் துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி இன்று சந்தித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
ஆண்டாள் கோயில் இடங்களைத் தனிநபர்கள் ஆக்கிரமித்துள்ளனர். கோயில் இடங்களில் வாடகைக்கு அமர்ந்துகொண்டு இந்து மதத்தை தவறாகப் பேசுபவர்களை வெளியேற்றுவது காலத்தின் கட்டாயம். அவர்களை அடித்து துரத்துவோம்.
பெரியார் குறித்து ரஜினி தவறாக ஏதும் பேசவில்லை. என்னைப் பொறுத்தவரை பெரியார் குறித்து ரஜினி பேசியிருப்பது யாருக்கும் எந்தப் பாதிப்பும் இல்லை. நடந்த நிகழ்வை மட்டுமே ரஜினி கூறினார்.
பிடித்தவர்கள் அவரது கருத்தை ஏற்றுக் கொள்ளட்டும். பிடிக்காதவர்கள் அமைதியாக இருந்து கொள்ளட்டும். ரஜினியை எதிர்த்து தம்பட்டம் அடித்து போராட்டத்தில் ஈடுபடுவது தேவையற்றது.
சசிகலா விரைவில் சிறையிலிருந்து வர வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை. அவர் சிறையில் இருப்பது வேதனை அளிக்கிறது. சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்தால் எனக்கு மகிழ்ச்சிதான்.
இவ்வாறு ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
இதையும் படிக்க : 5,8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - கைவிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்!