வங்கக் கடலில் உருவான நிவர் புயல் நவம்பர் 26ஆம் தேதி கரையை கடந்தது. இதனால், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. அதன் ஒரு பகுதியாக, விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி, அதன் சுற்று வட்டார பகுதிகளான கம்பாளி, அல்லாளப்பேரி, வல்லபன்பட்டி, ஊத்தான்குளம், இலுப்பைகுளம், தொட்டியான்குளம், முடுக்கன்குளம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இடியுடன் கூடிய பலத்த சூறை காற்றுடன் கனமழை பெய்தது.
அதனால், அந்த பகுதிகளில் 500 ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற் பயிர்கள் முழுவதும் சேதமடைந்தன. இதை, விருதுநகர் வடக்கு மாவட்ட செயலாளரும் திருச்சுழி சட்டப்பேரவையின் திமுக உறுப்பினருமான தங்கம் தென்னரசு நேரில் ஆய்வு செய்தார். அப்போது, சம்பவ இடத்துக்கு வந்து அலுவலர்களிடம் நெற் பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், பயிர் காப்பீட்டு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். மேலும், சேதமடைந்த நெற் பயிர்களுக்கு தமிழ்நாடு அரசும் மாவட்ட நிர்வாகமும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.