விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள தனியார் பொறியியல் கல்லூரி மைதானத்தில் 34ஆவது மாநில அளவிலான தடகளப் போட்டிகள் நேற்று முன்தினம் (ஜன.22) தொடங்கி இன்று (ஜன.24) வரை நடைபெறுகிறது. ஒலிம்பிக் தீபம் ஏற்றி தொடங்கிய நிகழ்ச்சியில், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கண்ணன், காவல்துறை கண்காணிப்பாளர் பெருமாள் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று ஒவ்வொரு போட்டியிலும் முதல் 3 இடங்களை பிடித்த வீரர், வீராங்கனைகளுக்கு பதக்கங்களை அணிவித்து கௌரவப்படுத்தினர்.
இப்போட்டிகளில் கலந்துகொள்ள தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 3700 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில் 14 வயதுக்குட்பட்ட பிரிவு முதல், 20 வயதுக்கு மேற்பட்ட பிரிவு என ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியே பத்து பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இதில், 100, 200, 400, 800 மீட்டர் ஓட்டம் , தொடர் ஓட்டம், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், வட்டு எறிதல், நீளம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல் என 28 வகையான தடகளப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. மாநில அளவிலான இந்த தடகளப் போட்டிகளில் வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகளில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெறும் அகில இந்திய அளவிலான தடகளப் போட்டியில் பங்கேற்க பரிந்துரைக்கபடவுள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:பவானிசாகர் அருகே வாழைகளை சேதப்படுத்திய காட்டு யானைகள்!