விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது மடவார் வளாகம் எனப்படும் வைத்தியநாத சுவாமி திருக்கோயில்.
இக்கோயிலில் இரண்டு நாள்களுக்கு முன்பு பூஜைகள் முடிந்து இரவு வழக்கம்போல் கோயில் நடை சாத்தப்பட்டது.
அப்போது, கோயிலின் முன்பகுதியில் உள்ள உண்டியல் உடைக்கும் சத்தம் கேட்டு காவலாளி சத்தம் எழுப்பியுள்ளார்.
இதைத்தொடர்ந்து உண்டியலை உடைக்க முயற்சித்த கொள்ளையன் தப்பி ஓடியுள்ளார். தப்பி ஓடிய கொள்ளையன் மஞ்சப் பூ தெரு பகுதிகளில் தொடர்ந்து அடுத்தடுத்து 3 வீடுகளில் கொள்ளை முயற்சி மேற்கொண்டு ஒரு வீட்டில் 3 செல்போனை திருடியுள்ளான்.
இந்தக் கொள்ளை சம்பவம் குறித்து கோயில் நிர்வாகம், பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து நகர காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், தற்போது கொள்ளையன் கோயிலுக்குள் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
அந்த சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு கொள்ளையனை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.
ஒரு மாதத்திற்கு முன்பு பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோயிலில் உண்டியல் கொள்ளை போனது நினைவுக்கூரத்தக்கது.
இதையும் படிங்க: கோயில் உண்டியல் உடைப்பு- ஊரடங்கை சாதுரியமாக பயன்படுத்திய திருடர்கள்