விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மஞ்சள் ஓடைப்பட்டி கிராமத்தில் விஜய குலத்தைச் சேர்ந்த கருப்பசாமி என்பவரது சோலை பட்டாசு தொழிற்சாலை இயங்கி வருகிறது.
இந்த பட்டாசு தொழிற்சாலை நாக்பூர் உரிமம் பெற்று பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இங்கு சுமார் 50க்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அறை தரைமட்டமானது
இந்நிலையில், இன்று பட்டாசு தொழிற்சாலை உரிமையாளர் கருப்பசாமி, அவரது உறவினர் செந்தில்குமார் ஆகியோர் பட்டாசு தயாரிப்பதற்காக மருந்து கலக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது உராய்வினால் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.
அவர்கள் வேலை செய்து கொண்டிருந்த அறை இடிந்து தரைமட்டமானது. அப்போது பணியில் இருந்த ஏழு பேர் காயமடைந்தனர். வெடி விபத்து குறித்து தகவல் அறிந்த வெம்பக்கோட்டை, சாத்தூர் பகுதியில் இருந்து மூன்று தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து வீரர்கள் மீட்புப்பணியில் ஈடுபட்டு காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர்.
பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு
கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு ஐந்து பேரும், சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு இரண்டு பேரும் ஏழு பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செந்தில்குமார், அவரின் உறவினர் காசி ஆகிய இருவர் உயிரிழந்தனர். மேலும், சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, பட்டாசு ஆலை உரிமையாளர் கருப்பசாமி என்பவரும் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து ஏழாயிரம்பண்ணை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக, ஜனவரி 1ஆம் தேதி அன்று, சிவகாசி அருகே களத்தூரில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு பணியாளர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: fireworks accident: சிவகாசி பட்டாசு விபத்து – 3 தனிப்படை அமைப்பு