கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் பல்வேறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அத்தியாவசியப் பொருட்கள் உற்பத்திக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டிருந்தது. அப்படி அத்தியாவசியத் தேவையான தீப்பெட்டி தொழிற்சாலையில் 50 சதவீத தொழிலாளர்களை வைத்து தீப்பெட்டி உற்பத்தி தொழிலை சமூக இடைவெளியுடன் தொடங்கலாம் என அரசு அறிவித்தது.
அதன்படி கடந்த சில நாட்களாக சாத்தூர், கோவில்பட்டி, ஏழாயிரம்பண்ணை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள ஏராளமான தீப்பெட்டி தொழிற்சாலைகளில் பணிகள் தொடங்கப்பட்டு அரசு அறிவித்த விதிமுறைகளின்படி தீப்பெட்டி தயாரிக்கும் பணி நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில் சாத்தூரில் தீப்பெட்டி தயாரிக்க தேவையான குச்சி உள்ளிட்ட மூலப் பொருட்கள் கேரளா, பாண்டிச்சேரி உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்து பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் தற்போது இருப்பு வைக்கப்பட்ட மூலப் பொருட்களை வைத்து மட்டுமே தீப்பெட்டி தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இருந்தபோதிலும் தற்போது இருக்கும் மூலப்பொருட்கள் தீரும் பட்சத்தில் மீண்டும் தீப்பெட்டி தொழிற்சாலைகள் மூடப்படும் நிலை உருவாகும். இதனால் தீப்பெட்டி தொழிலை நம்பி உள்ள பல ஆயிரம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என தீப்பெட்டி தொழிற்சாலை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சாத்தூரில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் தமிழ்நாடு முழுவதும் மட்டுமின்றி, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
தென்னகத்திற்கே ஒளி கொடுத்த சாத்தூர் தீப்பட்டி தொழிலாளர்களின் வாழ்வு இருளில் போகும் அபாயம் உள்ளது. இதனால், அத்தியாவசியத் தேவையான தீப்பெட்டி உற்பத்தி செய்ய தேவையான மூலப் பொருட்கள் கிடைப்பதற்கு தமிழ்நாடு அரசு வழிவகை செய்து சாத்தூர் தீப்பட்டி தொழிலாளர்கள் வாழ்வில் வெளிச்சத்தைக் காட்ட வேண்டும் என்பதே பாதிக்கப்படும் தொழிலாளர்களின் கோரிக்கையாக உள்ளது.
இதையும் படிங்க...'பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூடினால் நடவடிக்கை'