கல் குவாரிகளில் வெடி வைப்பதால் செம்மண்ணால் கட்டப்பட்ட குடிசைகள் போன்ற அஸ்திவாரம் வலிமையாகயில்லாத வீடுகள் அதிர்ந்து விரிசலடைகின்றன. இரவு, பகலாக லாரிகள் செல்வதால் அதிகமான விபத்து ஏற்படுகிறது என ஏதேனும் ஒரு கிராமத்தில் யாரேனும் சொல்லக் கேட்டிருப்போம். இந்த வெடிச் சத்தத்தால் குழந்தைகள், இதய பாதிப்பு உள்ளவர்கள், கர்ப்பிணிகள் அதிகமாக அவதியடைகிறார்கள்.
விருதுநகர் மாவட்டம், பாவாலி அருகே எல்கைப்பட்டி கிராமத்திலும் இதே பிரச்னையை மக்கள் சந்திக்கின்றனர். இந்த கிராமத்தில் சுமாராக 30 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் தனியாருக்குச் சொந்தமான கல் குவாரி கிரஷர் தொடர்ந்து 25 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்த கல்குவாரி கிரஷர் தொடக்கக் காலத்தில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்பதை விட, அப்போது அதன் பின்விளைவுகளை மக்கள் உணரவில்லை என்பதே நிதர்சனம்.
இந்நிலையில் தற்போது அதன் அருகே அமைக்கப்பட்டுள்ள கல் குவாரி தொடர்ச்சியான பாதிப்புகளை ஏற்படுத்துவதாக மக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இது தொடர்பாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் முதல் வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் என பல்வேறு அரசு அலுவலர்களிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் கூட, இன்றளவும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
குடியிருப்புப் பகுதியிலிருந்து 300 மீட்டருக்கு மேலான இடைவெளியில் அமைந்திருக்க வேண்டிய கல் குவாரி சட்ட விதிமுறைகளை மீறி இந்தக் கிராமத்தில் 150 மீட்டருக்குள் இயங்கி வருகிறது. இது குறித்து இப்பகுதி விவசாயி செல்வத்திடம் கேட்டோம். 'இந்த குவாரியால் பழைய ஊரணி என்ற பகுதியில் குடிநீர் மாசு ஏற்பட்டுள்ளது. இதனால் மனிதர்கள், வளர்ப்புப் பிராணிகள் உள்பட யாருக்கும் குடிநீர் கிடைக்கவில்லை. இதனால் குடிநீரின் இயல்பு தன்மையே மாறிவிட்டது' என குற்றஞ்சாட்டுகிறார்.
கிராமங்களின் மிக முக்கியமான அம்சமே குழந்தைகளுக்கு கிடைக்கும் சுதந்திரம் தான். காலையில் வெளியே செல்லும் குழந்தைகள் வீடு திரும்ப இரவு ஆகும். பசி, தாகம், தூக்கம் என அனைத்தும் மறந்து விளையாடும் அவர்களை வெளிய விடுவதற்கே எல்கைப்பட்டி கிராமத்தினர் அஞ்சுகின்றனர்.
ஏன் இந்த அச்சம் என அவ்வூர்வாசி ராமதிலகத்திடம் கேட்கவே, 'கல்குவாரியில் வெடி வைக்கும் போது அதிலிருந்து வெடித்து சிதறும் கற்கள் பல நேரங்களில் ஊருக்குள் விழுகின்றன. இதனாலேயே குழந்தைகளை விளையாட அனுப்ப மனம் வரவில்லை. தவிர, கிரஷரிலிருந்து வரும் தூசியின் காரணமாக சுவாசக்கோளாறு போன்ற பல்வேறு நோய்த் தொற்றுகள் ஏற்படுகின்றன' என்றார்.
இரவு நேரங்களில் இப்பகுதியில் கேட்கும் சத்தத்தினால் நிம்மதியான தூக்கம் என்பதே இல்லாமல் போய்விட்டதாகத் தெரிவிக்கிறார், ராஜதிலகம். 'ஒரு மனிதனின் நிம்மதிக்கு காரணமே அவனுடைய தூக்கம் தான். ஒருவரின் உடல் நலத்தை பேண முழு முதற்காரணம் தூக்கம் என்றே சொல்லலாம். ஆனால் எல்கைப்பட்டியினருக்கு அது ஒரு நெடுங்கனவு. இது மட்டுமில்லாமல் இந்த குவாரியால் வாழ்வாதாரமே பாதிக்கப்பட்டுவிட்டதாக' அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
’விவசாய நிலங்களில் கற்கள் விழுவதால் வேலையாட்கள் நிலத்திற்குள் இறங்கி வேலை செய்யவே அஞ்சுகின்றனர். இது குறித்து 6 முறை கோரிக்கை மனு அளித்துள்ள நிலையில் தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை' என வருந்துகிறார் முத்துராஜ்.
ஒரு கிராமத்தினரின் உடல் நலமும், வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்ட அவலநிலை குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் தொடர்புகொண்டுகேட்டபோது, ’கல் குவாரி குறித்த முறையான விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணைக்குப்பின்பு தான் முழுமையான தகவல் வழங்க முடியும்' என்றனர்.
தொடர்ந்து பல ஆண்டுகளாக இன்னலில் தவிக்கும் மக்களின் நிலையை அரசு கவனமெடுத்து சரி செய்ய வேண்டும். கிராமங்கள் தான் நாட்டின் முதுகெலும்பு என்பதை மாவட்ட நிர்வாகம் புரிந்து கொண்டு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே, இந்த கிராமத்தினரின் வாழ்வாதாரத்தை மட்டுமல்ல; நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தையும் காக்க முடியும். இது இப்பகுதியினரின் ஒருமித்தக் கோரிக்கையாக உள்ளது.
இதையும் படிங்க:கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்