வங்கக் கடலில் உருவாகியுள்ள புரெவி புயல் தென் மாவட்டங்களை அதிகமாகத் தாக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதையடுத்து விருதுநகர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கண்ணன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது பேசிய அவர், ”மாவட்டத்தில் 30 இடங்கள் வெள்ளம் பாதிக்கப்படும் பகுதிகளாகக் கண்டறியப்பட்டு அப்பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இன்றுமுதல் மாவட்டத்தில் குடிசைப் பகுதிகளில் உள்ள மக்களைக் கண்டறிந்து முகாம்களுக்கு அனுப்பிவைக்க உள்ளோம்.
மழை வெள்ளம் வந்தால் மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் முகாம்கள் தயாராக உள்ளன. மாவட்டத்தில் ஒன்பது இடங்கள் வெள்ளம் பாதிக்கப்படும் இடங்களாகக் கண்டறியப்பட்டுள்ளன. அங்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு அலுவலர்கள் செய்துவருகின்றனர்.
மேலும், மாவட்டத்தில் உள்ள ஒன்பது அணைகளில் தற்போது மூன்று அணைகளில் 30 விழுக்காடு நீர் நிரம்பி உள்ளது. ஆறு அணைகள் காலியாக உள்ளன. மழை அதிகமாகப் பெய்தால் ராஜபாளையம், அருப்புக்கோட்டை, சிவகாசி ஆகிய பகுதிகளில் 50 நீச்சல் பயிற்சி வீரர்களும், பரிசல்களும் மக்களை மீட்கத் தயாராக உள்ளனர்” எனக் கூறினார்.
இதையும் படிங்க: வலுவடைந்தது 'புரெவி' புயல் சின்னம் - கனமழைக்கு வாய்ப்பு