விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஏழாயிரம் பண்ணை அருகே உள்ள மடத்துப்பட்டி கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வசித்துவருகின்றனர். கடந்த உள்ளாட்சித் தேர்தலில் மடத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மூன்று சமூக மக்கள் சார்பாக அருந்ததியர் இனத்தைச் சேர்ந்த அய்யம்மாள் என்ற பெண்மணியை தேர்தலில் நிற்க வைத்து மாபெரும் வெற்றிபெறச் செய்தனர்.
எதிர்த்தரப்பில் இதே கிராமத்தைச் சேர்ந்த பட்டியலின சமூகத்தைச் சார்ந்த ஜோதிபாஸ் என்பவர் தேர்தலில் படுதோல்வி அடைந்தார். மேலும் இப்பகுதியிலுள்ள 80 ஆண்டுகளுக்கும் மேலாக பழமையான செல்வ விநாயகர் ஸ்ரீ காளியம்மன் கோயிலில் 3 சமுதாய மக்கள் மட்டும் வழிபட்டுவந்தனர்.
இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தல் தோல்விக்கு பின் பட்டியலின மக்கள் மடத்துப்பட்டியில் உள்ள செல்வ விநாயகர் ஸ்ரீ காளியம்மன் கோயிலில் சாமி கும்பிடுவதற்கு எங்களுக்கும் உரிமை உள்ளது என்று கடந்த 20.1.2020 அன்று திடீரென ஊருக்குப் பொதுவான இடத்தில் போராட்டம் நடத்தினார்கள். அப்போது வெம்பகோட்டை தாசில்தார் விஜயராஜ் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி அன்றைய போராட்டம் கைவிடப்பட்டது.
அதற்கு பின் சாத்தூரில் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தைக் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்து 2 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் சுமூக உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் இன்று 3 சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் 300 பெண்கள் உட்பட சுமார் 500க்கும் மேற்பட்டோர் திரண்டு, செல்வ விநாயகர் ஸ்ரீ காளியம்மன் கோயில் முன்பாக போராட்டம் நடத்தினார்கள்.
தகவலறிந்து வந்த வெம்பகோட்டை வட்டாட்சியர் விஜயராஜ் வரும் 20.02.2020 அன்று நடைபெற உள்ள கூட்டத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சமாதான பேச்சுவார்த்தை நடத்தி ஆர்ப்பாட்டத்தை கலைத்தார். 500க்கும் மேற்பட்ட ஊர் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சமபவம் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலையை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: அங்கே இருப்பது தமிழுக்கு எதிரான ஆட்சி, இங்கே இருப்பது துப்பில்லாத ஆட்சி - மு.க.ஸ்டாலின்!