தமிழ்நாட்டில் கரோனா தொற்று இரண்டாவது அலை பரவிவருகிறது. அதை தடுக்க தமிழ்நாடு அரசும், மாவட்ட நிர்வாகமும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
தமிழ்நாடு அரசு புதிதாக பல்வேறு கட்டுபாடுகளை அறிவித்துள்ள நிலையில், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பிரதான சாலையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் காலை முதல் வாடிக்கையாளர்கள் அதிகமாக குவிந்தனர். இதனால் இருக்கைகளில் அமர்வதற்காக வாடிக்கையாளர்கள் முந்தியடித்தும், தகுந்த இடைவெளியை கடைப்பிடிக்காமலும் இருந்தனர்.
மேலும், இந்த வங்கி குளிர்சாதன வசதியுடன் செயல்பட்டு வந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து தகவலறிந்து வந்த நகராட்சி அலுவலர்கள் வங்கியின் அலுவலர்களிடம், வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்கள் கட்டாயம் முகக்கவசம், தகுந்த இடைவெளி உள்ளிட்ட விதிமுறைகள் கடைப்பிடிக்க வேண்டும் என தெரிவித்தனர்.
இதையடுத்து வங்கியில் முறையாக வாடிக்கையாளர்கள் அனுமதிக்கபட்டனர். ஏற்கனவே வங்கியில் பணியாற்றும் ஊழியர் இருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சையில் இருப்பது குறிப்பிடதக்கது.