விருதுநகரில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் நேற்று (ஜன.3) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், " ராஜிவ்காந்திக்குப் பிறகு இரண்டாவது பிரதமராக மோடி விருதுநகர் வருகிறார். மோடியை நாங்கள் வரவேற்கிறோம். பிரதமரின் வருகை மாவட்டத்தில் உள்ள பல்வேறு முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வகையில் இருக்க வேண்டும்.
மேலும் சிவகாசி பட்டாசு பிரச்சினை, பட்டாசு தொழிலாளர்கள் குறித்து பேச பிரதமர் மோடி நேரம் ஒதுக்க வேண்டும். காரைக்குடியில் நீரி அமைப்பின் கிளையைத் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 2019ஆம் ஆண்டு மோடி அடிக்கல் நாட்டினார்.
எய்ம்ஸ் மருத்துவமனை பணிகுறித்து ஒன்றிய அரசிடம் கேட்டால், ஜப்பானின் 90 சதவீத கடனால் நடைபெறுகிறது எனப் பதில் வருகிறது. எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டியதோடு நம்முடைய பிரதமர் அவரின் பணியை முடித்து கொண்டார். மருத்துவக்கல்லூரி திறப்பு விழாவிற்கு வருகை தரவுள்ள பிரதமர் மோடி மதுரை விமான நிலையத்தை, சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் ஒரு முன்னாள் அமைச்சருக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது இதுவே முதல்முறை. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தவறு செய்யவில்லை எனில் சட்டத்திற்கு முன்னர் வந்து நிற்க வேண்டும். அவரைக் காப்பாற்ற பாஜக துணைநின்றால் அது தவறு, ஒரு நாள் ராஜேந்திரபாலாஜிக்கு தண்டனை உண்டு" என்றார்.
இதையும் படிங்க: நரேந்திர மோடி திமிர் பிடித்தவர்- ஆளுநர் சத்ய பால் மாலிக்