ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வந்த கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், செய்தி விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு ஆகியோர் கூட்டாக இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது,
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் பல்வேறு நலத் திட்டப்பணிகளை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. ஒவ்வொரு துறையிலும் சிறந்த முறையில் செயலாற்றி வருகிறது. அவ்வகையில் கால்நடைத்துறையில் மூன்று மருத்துவ கல்லூரி, ஒரு ஆராய்ச்சி நிலையம் மேலும், தெற்காசியாவில் மிக பெரிய கால்நடை பூங்கா சேலத்தில் தொடங்குவதற்கு கட்டிட வேலைகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இதனை டிசம்பர் மாதத்தில் திறப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலின் பெருமைகளை சொன்னார்கள் அதனடிப்படையில் அம்மாவின் அரசு பல்வேறு கோயில்களுக்கு பல்வேறு நலப்பணிகளை செய்துள்ளது. இந்த ஆட்சி மீண்டும் மக்களின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.
கால்நடை பராமரிப்பு துறையில் 1,154 மருத்துவர்களுக்கான பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சியில் அறிவிக்கபட்டு அதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன. வேலை வாய்ப்பில் திறந்த மனதோடு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. 2021 தேர்தலை பொருத்தவரை தமிழ்நாடு அரசின் பணிகள், சாதனைகளை மக்களிடம் சொல்லி வாக்களியுங்கள் என்று கூறுவோம் என தெரிவித்தனர்
விஜய்சேதுபதி குறித்த கேள்விக்கு அமைச்சர் கடம்பூர் ராஜு கூறுகையில், கலைத்துறையினருக்கு மிரட்டல் வரவில்லை, விஜய்சேதுபதி மட்டுமல்ல சாதாரண மக்களுக்கு பாதிப்பு என்றாலும் இந்த அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். மேலும் விஜய்சேதுபதி புகார் அளித்துள்ளார் விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும். என்றார்.
இதையும் படிங்க: 26 புதிய தொழில் திட்டங்களுக்கு முதலமைச்சர் அனுமதி