விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை சொக்கலிங்காபுரம், பாளையம்பட்டி ஆகியப் பகுதிகளில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் ஏராளமான இளைஞர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். அந்தப் பகுதிகளில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் அவர் மருத்துவர்களிடம் கரோனா தடுப்பு பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய அவர், "முதலமைச்சரின் உரிய நடவடிக்கை காரணமாக தொற்று குறைந்து வருகிறது. தமிழ்நாடு முழுவதும் தடுப்பூசி முகாம்கள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது தடுப்பூசி செலுத்துவதற்கு மக்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.
வரும் மார்ச் மாதத்திற்குள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும்.
கரோனா தொற்றால் உயிரிழந்தவரின் உடலை குடும்பத்தினரிடம் முறையின்றி ஒப்படைத்தால், தனியார் மருத்துவமனையின் உரிமம் ரத்து செய்யப்படும்.
ரெம்டெசிவிர் மருந்து கூடுதலாக கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கூடிய விரைவில் ரெம்டெசிவிர் மருந்து அனைத்து இடங்களிலும் பயன்பாட்டிற்கு வரும்" என்றார்.
இதையும் படிங்க: World No Tobacco Day 2021: புகைப்பழக்கம் கரோனா பாதிப்பை அதிகரிக்குமா?