தமிழ்நாட்டில், கரோனா இரண்டாவது அலை அதிதீவிரமாக பரவி வரும் நிலையில் அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
மேலும் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்திய அரசு தற்போது 18 வயது பூர்த்தி அடைந்த அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.
அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் அப்போதுதான் நாம் கரோனாவை எதிர்கொண்டு வெல்ல முடியும் என்பது அரசின் நிலைப்பாடாக உள்ளது.
இந்நிலையில், விருதுநகர் மெயின் பஜார் வியாபாரிகள் சங்கம் சார்பில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இலவசமாக கபசுரக் குடிநீர், முகக்கவசம், கையுறை, கிருமி நாசினி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியினை பஜார் வியாபாரிகள் சங்கம் சார்பில் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டு பஜாரில் கடை வைத்திருக்கும் வியாபாரிகள், ஊழியர்கள் பஜாருக்கு வரும் பொதுமக்கள் என அனைவருக்கும் கரோனா தொற்றை எதிர்க்கும் கபசுரக் குடிநீர் வழங்கினர்.
மேலும் அனைவருக்கும் முகக்கவசம், கையுறை, கிருமி நாசினி ஆகியவற்றையும் இலவசமாக வழங்கினர். தொடர்ந்து,
கையுறைகள் அணிவோம் கரோனாவை வெல்வோம்
முகக்கவசம் நமக்கு உயிர்க்கவசம்
இருவருக்கும் இடையில் உரிய தகுந்த இடைவெளியை விடுவோம் கரோனாவை ஓட விடுவோம் கபசுரக் குடிநீர் உயிர்காக்கும் அமுத நீர்
வெள்ளம் வரும் முன் அணை கட்டுவோம் வருமுன் தடுப்பு ஊசி போட்டுக் கொள்வோம்
அரசுக்கு ஒத்துழைப்போம் பொதுமக்களை பாதுகாப்போம் என்பன போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு முழக்கமிட்டனர்.
பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இத்தகைய சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்த பஜார் வியாபாரிகள் சங்கத்தினரை பொதுமக்களும் தன்னார்வலர்களும் வெகுவாகப் பாராட்டினர்.