விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கான்சாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெபஸ்டியன். இவரது மனைவி மோட்சம். கணவன், மனைவிக்கும் இடையே அடிகடி தகராறு ஏற்படுவது வழக்கம். இதேபோல் சம்பவத்தன்றும் ஏற்பட்ட தகறாரில் ஆத்திரமடைந்த ஜெபஸ்டியன் மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றார்.
அருகில் இருந்தவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த ஜெபஸ்டியனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வழக்கை விசாரித்த நீதிபதி ஜெபஸ்டியன் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு ஆயுள்தண்டனை மற்றும் ரூ. 5ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.