விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள காமராஜர் சிலைக்கு அடையாளம் தெரியாத நபர்கள் காலணி மாலை அணிவித்ததாகக் கூறி ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்கள் காமராஜர் சிலையின் கீழ் தரையில் அமர்ந்து மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
இதையடுத்து அவர்களைத் தடுத்து நிறுத்திய நகர காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி சிலையை அவமரியாதை செய்த அடையாளம் தெரியாத நபர்களின் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதிகூறிய பிறகு மறியலில் ஈடுபட முயன்றவர்கள் கலைந்துசென்றனர்.
இதைத்தொடர்ந்து அப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் அசம்பாவிதங்களைத் தடுக்க பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்து குற்றச் செயலில் ஈடுபட்ட அடையாளம் தெரியாத நபர்கள் யார் என்று காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இது குறித்து நகர காங்கிரஸ் நிர்வாகம் சார்பில் காவல் துறையிடம் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தால் சுமார் இரண்டு மணி நேரமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: காவலர் காலில் விழுந்த திமுக முன்னாள் அமைச்சர்!