விருதுநகர்: கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத் துறை அமைச்சராக பொறுப்பு வகித்தவர் கே.டி. ராஜேந்திர பாலாஜி. இவர் தற்போது, அதிமுக மேற்கு மாவட்டச் செயலாளராக பொறுப்பு வகிக்கிறார்.
இந்நிலையில், தனது உறவினருக்கு ஆவின் நிறுவனத்தில் கிளை மேலாளராக வேலை வாங்கித் தருவதாக ரூ. 30 லட்சம் வாங்கியதாக அதிமுக பிரமுகர் விஜய நல்லதம்பி, ராஜேந்திர பாலாஜி, மாரியப்பன் ஆகிய மூவர் மீதும் சாத்தூரைச் சேர்ந்த ரவீந்திரன் என்பவர் மாவட்ட குற்றப்பிரிவில் புகாரளித்தார்.
இதுதொடர்பாக, ராஜேந்திர பாலாஜி உள்பட மூவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, அதிமுக பிரமுகர் விஜய நல்லதம்பி புகார் ஒன்றை அளித்தார். அதில், ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனது உதவியாளர் மூலம் ரூ. 1.06 கோடி பெற்றுக் கொண்டதாக ராஜேந்திர பாலாஜி, அவரது உதவியாளர்கள் பலராமன், பாபுராஜ், முத்துப்பாண்டி ஆகியோர் மீது மாவட்ட குற்றப் பிரிவில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த வழக்கில் தன் மீது மேல் நடவடிக்கை எடுக்கத் தடை விதிக்கக்கோரியும், முன் ஜாமீன் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜி மனு தாக்கல் செய்தார்.
இம்மனுவை, கடந்த நவம்பர் 17ஆம் தேதி சென்னை உயர் நீதி மன்றம் தள்ளுபடி செய்தது. இதன் தொடர்ச்சியாக, விருதுநகர் மாவட்ட காவல் கண்கானிப்பாளர் மனோகரன் உத்தரவின்பேரில் எட்டு தனிப்படை காவல் துறையினர், ராஜேந்திர பாலாஜியை தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று (ஜனவரி 5) கர்நாடகாவில் ஹசன் பகுதியில் காரில் சென்று கொண்டிருந்த ராஜேந்திர பாலாஜியை தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர்.
இந்நிலையில், ஸ்ரீஇவில்லிபுத்தூர் மாவட்ட நீதிமன்றம் முன்பு ராஜேந்திர பாலாஜியை அழைத்து வரும் செய்தியறிந்த அதிமுகவினர், நகரச் செயலாளர் தலைமையில் 50 பேர் அணி திரண்டனர். அவர்களை கலைந்து செல்லுமாறு காவல் துறையினர் அறிவுறுத்தியும் அவர்கள் மறுத்ததால், அவர்களை கைது செய்த காவல் துறையினர், திருமண மணடபத்தில் தங்க வைத்துள்ளனர்.
இதேபோல், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முன்னாள் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் எம் எஸ் ஆர் ராஜவர்மன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட அதிமுகவினர் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அனைவரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.
நீதிமன்ற காவல்
விருதுநகரில் விசாரணை முடிந்த நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் 2ல் ராஜேந்திர பாலாஜி இன்று ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வரும் 20ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி பரம்வீர் உத்தரவிட்டார். இதனையடுத்து, 15 நாள்கள் நீதிமன்ற காவலில் வைப்பதற்காக மதுரை மத்திய சிறைச்சாலைக்கு ராஜேந்திர பாலாஜி அழைத்துச் செல்லப்பட்டார்.
இதையும் படிங்க: தமிழ்நாடு அரசிற்கு திருப்பூர் சுப்பிரமணியம் கோரிக்கை!