விருதுநகர் மாவட்டம் இராசபாளையம் பகுதியில் கரோனா தொற்று காரணமாக ஹாட் ஸ்பாட் தடை செய்யப்பட்ட பகுதியாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்நிலையில் இன்று 144 தடை உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டது போல் பழைய பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிகரித்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இராசபாளையத்தில் தொழிலதிபர் ஒருவரின் பிறந்த நாள் விழாக் கொண்டாட்டத்தை காவல் துறையினர் ஏற்பாட்டில் பழைய பேருந்து நிலைய காய்கறி மார்க்கெட்டை தற்காலிகமாக ஆக்கிரமித்து, 700க்கும் மேற்பட்ட பொதுமக்களை சமூக இடைவெளியின்றி வரவழைத்து, அத்தியாவசிய பொருள்கள் வழங்குவதாகக் கூறி பொதுமக்களுக்கு டோக்கன்களையும் வழங்கினர்.
மத்திய, மாநில அரசுகள் கரோனா வைரஸ் பாதிப்பையடுத்து பொதுக் கூட்டங்கள், சுப நிகழ்ச்சிகள், இறுதி சடங்குகள் என அனைத்திற்கும் கட்டுபாடு விதித்துள்ள நிலையில், அதனை மீறி இராசபாளையத்தில் இன்று மக்களை கூட்டி வைத்து, தனிநபர் ஒருவரின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டுள்ளது பொதுமக்களிடையே மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இதற்கு இராசபாளையம் சிறப்பு காவல் படை காவலர்கள், தங்களது வாகனத்திலேயே அத்தியாவசிய பொருள்களை ஏற்றி வந்து இறங்குவது, அவர்களின் பணிகளில் ஈடுபடுவது போன்ற செயல்களில் இறங்கினர். தற்போது அரசு விழாக்கள்கூட ஒத்திவைக்கப்படும் நிலையில் இவர்களுக்கு அனுமதி அளித்தது யார்? காய்கறி மார்க்கெட் மூட அறிவுறுத்தியது யார்? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, காவல் துறையினர் மத்திய, மாநில அரசு விதிகளுக்கு புறம்பாக தனிநபர் பிறந்தநாள் விழாவிற்கு எந்த ஒரு சுகாதார பாதுகாப்பும் இல்லாமல் அதிகமான மக்களை கூட்டியது, காவல் துறை வாகனங்களை தனி நபருக்கு பயன்படுத்தியது எப்படி என கேள்வி எழுப்பினர். பொதுமக்களை காய்கறி வாங்கவிடாமல் அலைக்கழிக்கும் காவல் துறையினர் தனிநபருக்கு எந்த விதத்தில் ஒத்துழைப்பு கொடுக்கின்றனர் என்று தெரியவில்லை என குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதையும் படிங்க:பெண்களின் தனிமையை பணமாக மாற்றிய குமரி இளைஞர் கைது!