- விருதுநகர் மாவட்டம்
இந்தியாவின் 73ஆவது சுதந்திர தினவிழா நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டுவரும் நிலையில், அரசு அலுவலகங்கள் பள்ளிகள் போன்ற இடங்களில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு இனிப்புகளை வழங்கி மக்கள் கொண்டாடிவருகின்றனர். அதன் ஒருபகுதியாக, விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தனியார் பள்ளி சார்பில் சுதந்திர தின விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
சாதனை முயற்சியாக இப்பள்ளி மாணவர்கள் 670 அடி நீளம் கொண்ட பிரமாண்டமான தேசியக்கொடியை கைகளில் ஏந்தி ஊர்வலமாகச் சென்று சுதந்திர தின விழாவினை கொண்டாடினர். இது அருப்புக்கோட்டை அஜிஸ் நகரில் உள்ள தனியார் பள்ளியிலிருந்து தொடங்கி தெப்பகுளம், சிவன் கோயில், மதுரை சாலை வழியாக புதிய பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது.
இந்த ஊர்வலத்தில் 200-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். சிறப்பாக பணியாற்றிய 223 அரசு ஊழியர்கள், காவல் துறையினருக்கு நற்சான்றிதழை ஆட்சியர் சிவஞானம் வழங்கினார்
- சிவகங்கை மாவட்டம்
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக மைதானத்தில் ஆட்சியர் ஜெயகாந்தன், காவல் துறை கண்காணிப்பாளர் ரோஹித்நாதன் ராஜகோபால் ஆகியோர் இணைந்து தேசியக்கொடியை ஏற்றினர். தொடர்ந்து, சமாதானத்தை வலியுறுத்தும் விதமாக வெண்புறா, மூவர்ண பலூன்களை பறக்கவிட்டதுடன் சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்ட தியாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பல்வேறு துறைகளின் கீழ் 127 பயனாளிகளுக்கு 44 லட்சத்து 66 ஆயிரத்து 570 ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.
- ராமநாதபுரம் மாவட்டம்
ராமநாதபுரம் மாவட்ட ஆயுத காவல்படை பயிற்சி மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ஆட்சியர் வீரராகவ ராவ் தேசியக்கொடியை ஏற்றினார். அமைதி, தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தி புறாக்களையும் மூவர்ண பலூன்களையும் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா பறக்கவிட்டார்.
அதனைத் தொடர்ந்து பல்வேறு துறை சார்பாக 128 பயனாளிகளுக்கு மூன்று கோடியே 84 லட்சத்து 80 ஆயிரத்து 214 ரூபாய் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். அரசின் பல்வேறு துறை அலுவலர்களின் பணிகளைப் பாராட்டி 137 பேருக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும், மாணவ மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
- திண்டுக்கல் மாவட்டம்
திண்டுக்கல் மாவட்ட விளையாட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி கலந்துகொண்டு தேசியக்கொடியை ஏற்றினார். இவருடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் உடனிருந்தார். நாட்டில் அமைதியும் சமாதானமும் நிலைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வெண்புறாக்களும் வண்ண பலூன்களும் பறக்கவிடப்பட்டன.
மேலும் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையினருக்கும் அரசு ஊழியர்களுக்கும் தமிழ்நாடு அரசின் விருதுகளை மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி வழங்கி கவுரவித்தார். பல்வேறு துறைகளின் சார்பில் 62 பயனாளிகளுக்கு ரூ 92.33 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
- கன்னியாகுமரி மாவட்டம்
குமரி மாவட்டம் நாகர்கோவிலில் அறிஞர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே தேசியக் கொடியை ஏற்றிவைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதில் பள்ளி மாணவ மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
விழாவில் மாவட்டத்தில் அரசுப் பணிகளில் சிறப்பாகப் பணிபுரிந்த 50 அலுவலர்கள், பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும் 26 பயனாளிகளுக்கு 12 லட்சத்து 33 ஆயிரத்து 52 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் ஆட்சியர் வழங்கினார்.
விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத், உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள், மாணவ மாணவியர், ஆசிரியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர்கள் கலந்துகொண்டனர்.
- தூத்துக்குடி மாவட்டம்
தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தருவை மைதானத்தில் தேசியக்கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் தலைமையில் நடைபெற்ற காவல் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட அவர் சுதந்திர தின சிறப்பு உரையாற்றினார்.
அதையடுத்து, தியாகிகளின் வாரிசுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். மாவட்டத்தில் சிறப்பாகப் பணியாற்றிய அரசு அலுவலர்களுக்கும், பள்ளித் தேர்வில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவ மாணவியருக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். கலைஞர்களுக்கு கலை சுடர்மணி, கலை இளமணி, விருதுகளையும் மாவட்ட ஆட்சியரால் வழங்கப்பட்டது.
இதேபோல் தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தில் துறைமுகத் தலைவர் டி.கே. ராமச்சந்திரன் தேசியக்கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற மத்திய தொழில் பாதுகாப்புப் படை காவல் அணிவகுப்பை ஏற்றுக்கொண்ட அவர் சுதந்திர தின பேருரை ஆற்றினார். அதில் துறைமுகத் செயல்பாடுகள், திட்டங்கள், இலக்குகள் ஆகியவை குறித்து விளக்கமாகப் பேசினார். இதையடுத்து பள்ளி மாணவ-மாணவியரின் கண்கவர் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
- தேனி மாவட்டம்
தேனி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் இந்திய தேசியக்கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்னர் சுதந்திர போராட்ட தியாகிகள், அவர்களது வாரிசுகளுக்கு பொன்னாடை, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மூவர்ணங்களுடன் கூடிய பலூன், சமாதானத்தின் சின்னமாக விளங்கக்கூடிய புறாவையும் பறக்கவிட்டு தேனியில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.
இதனைத்தொடர்ந்து வேளாண், தோட்டக்கலை, சமூக நலன் உள்ளிட்ட பல்வேறு துறை சார்பில் 57 பயனாளிகளுக்கு 27 லட்சத்து 81 ஆயிரத்து 195 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மேலும் மாவட்டத்தில் உள்ள பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய நபர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ், நினைவுப்பரிசுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.