விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் நேற்று (மே 28) மாலையில் இருந்து இரவு முழுவதும் பரவலாக மழை பெய்தது. இந்நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள ராமலிங்காபுரம் பகுதியில் எல்லம்மாள் என்ற 80 வயது மூதாட்டி வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், வழக்கம்போல் இன்று காலை தண்ணீர் எடுத்துவிட்டு எல்லம்மாள் வீட்டிற்கு சென்றபோது, எதிர்பாராத விதமாக வீட்டின் சுவர் இடிந்து மூதாட்டியின் மீது விழுந்தது. இதைக்கண்ட அருகிலிருந்தவர்கள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்து மூதாட்டியை காப்பாற்ற முயற்சித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் நீண்ட நேரம் போராடி மூதாட்டி எல்லம்மாளை சடலமாக மீட்டனர். இதைத்தொடர்ந்து மூதாட்டியின் உடலை கைப்பற்றிய காவல்துறையினர், உடற்கூறாய்வுக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 70 ஆண்டுகள் பழமைவாய்ந்த வீடு இடிந்து விழுந்ததில் 80 வயது மூதாட்டி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க:கிணற்றில் மூழ்கி 12ஆம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு