விருதுநகர் மாவட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள கரோனா தொற்றுத் தடுப்பு நடவடிக்கைகளை, மாநில வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் தலைமையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். முன்னதாக ராஜபாளையம் அரசு மருத்துவமனை மற்றும் செங்குன்றாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர், கரோனா சிகிச்சை தொடர்பான நடவடிக்கைகளை கேட்டறிந்து, தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார்.
பின்னர், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள, அத்தியாவசிய பொருட்கள் விநியோகத்தை கண்காணிக்கும் கட்டுப்பாட்டு அறையை திறந்து வைத்து பின் அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்," விருதுநகர் மாவட்டத்தில் ஆக்சிஜன் படுக்கையில் ICU படுக்கைகள் மற்றும் சாதாரண படுக்கைகள் போதிய அளவில் இருப்பதால் மக்கள் பதட்டமடைய தேவையில்லை. விருதுநகரில் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில், மருத்துவக் கல்லூரி அமைவதால், மாவட்டத்தில் பட்டாசு விபத்து மற்றும் நெடுஞ்சாலை விபத்துகளுக்கு சிகிச்சை அளிக்க, விஐபி திட்டத்தில் ட்ரவுமா கேர் (trauma care) சென்டர் அமைக்கப்படும்" என்றார்.
தொடர்ந்து, கோயம்புத்தூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், மத்திய சுகாதாரத் துறை அமைச்சருக்கு எழுதிய கடித்ததில், தமிழ்நாட்டில் கரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த மத்திய அளவிலான உயர்மட்டக் குழு அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளதை சுட்டிக்காட்டிய அமைச்சர், "கரோனா தொற்றுப் பரவுதலை தடுக்க மத்திய அளவிலான உயர்மட்டக் குழு அமைக்க அவசியம் இல்லை என்றும், தமிழ்நாட்டில் புதிய அரசு ஆட்சி பொறுப்பு ஏற்று கடந்த 20 நாட்களில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் எப்போதும் இல்லாத அளவுக்கு சட்டப்பேரவைக் கட்சி உறுப்பினர்களைக் கொண்ட குழு அமைத்து பல சிறப்பான நடவடிக்கை எடுத்து வருகிறார்.
பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கரோனா பிரச்னையில் அரசியல் செய்ய வேண்டாம் என்றும் அவர் சார்ந்த கட்சியை சேர்ந்த மத்திய அரசிடம் பேசி தமிழ்நாட்டின் கூடுதல் தடுப்பூசி தேவைகளுக்கு உதவ முன்வர வேண்டும் என வானதி சீனிவாசனுக்கு கோரிக்கை விடுப்பதாக தெரிவித்தார். தமிழ்நாட்டில் தகுதி உள்ள எல்லோருக்கும் தடுப்பூசி செலுத்த 3 .5 கோடி தடுப்பூசி வாங்க ஏதுவாக உலகளாவிய ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.
தொற்றை கட்டுப்படுத்தவும் ஒழிக்கவும் நடவடிக்கை எடுப்போம் என்றும் அறிவுரை கூறியுள்ளதாகவும், காபந்து முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி இருந்த 7ஆம் தேதி வரை 250 மெட்ரிக் டன் தான் ஆக்சிஜன் கையிருப்பு இருந்தது. தொற்று உயர்ந்த நிலையில் 575 மெட்ரிக் டன் நாள் ஒன்றுக்கு தேவைப்பட்டது. 250 மெட்ரிக் டன் ஆக்சிஜனை வைத்து கொண்டு ஒரு திறமையான நிர்வாகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
தமிழ்நாட்டில் தற்போது 650 மெட்ரிக் டன் கையிருப்பில் உள்ளது எனவும், தொற்று பாதிப்பை வைத்து யாரும் அரசியல் செய்ய முயற்சிக்க வேண்டாம். மக்கள் நலனில் அக்கறை கொண்டு செயல்பட வேண்டும். தமிழ்நாட்டில் தற்போது வரை 256 நபர்கள் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உயர் மட்ட மருத்துவ வல்லுநர் குழு மூலம் நாளை கருப்பு பூஞ்சை தொற்று ஏற்படுவது குறித்து ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். பாதிக்கப்பட்டோர்களை கண்டறிந்து அவர்களுக்கு மத்திய அரசு அனுப்பியுள்ள மருந்து, சென்னையிலிருந்து உரிய முறையில் வழங்கப்பட்டு வருகிறது" என்றார்.
இதையும் படிங்க:கரோனாவால் தடை செய்யப்பட்ட பகுதியில் அமைச்சர்கள் ஆய்வு!