விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் தேர்தல் பணிகளுக்குச் சென்றிருந்த நபர்களின் வீட்டில் அடையாளம் தெரியாத நபர்கள், 75 சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.
தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் நேற்று (ஏப்ரல் 6) நடைபெற்ற நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் தன்யா நகரைச் சேர்ந்த ஸ்ரீராம் என்ற ஆசிரியர் தேர்தல் பணிக்காக சென்றிருந்ததால், வீட்டைப் பூட்டி விட்டு அவரது மனைவி, குழந்தைககளை, தனது உறவினர் வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிட்டுள்ளார். பின், மாலை வீடு திரும்புகையில் வீட்டுக் கதவு மற்றும் பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த 16 சவரன் தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள் மற்றும் பத்தாயிரம் ரூபாய் களவு போனது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
மேலும் ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் ரோட்டில் அமைந்துள்ள, மகாத்மா நகரில், தனியார் கல்லூரியில் வேலை பார்க்கும் பேராசிரியர் இளங்கோவன், தேர்தல் பணிக்குச் சென்றிருக்கும்போது, அவரது மனைவி மற்றும் குழந்தைகள் மனைவியின் பெற்றோர் வீட்டுக்குச் சென்று இருந்தனர்.
இதை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்ட அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து 59 சவரன் நகைகள், 2 கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் 50,000 ரூபாயை கொள்ளையடித்துச் சென்றனர். இது குறித்து நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அடுத்தடுத்தப் பகுதிகளில் உள்ள தனியார் மற்றும் மகாத்மா நகர் ஆகிய இடங்களில் நடைபெற்ற தொடர் கொள்ளையால், இப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பின்னர் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு, இருவேறு பகுதிகளிலும் காவல் துறையினர் தீவிர வேட்டையிலும் ஈடுபட்டனர். கொள்ளையடித்தவர்கள் குறித்த விசாரணையில், தடயவியல் நிபுணர்களின் காலதாமதம் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
ஏனெனில், நகை, கொள்ளை போய் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்து, சுமார் 4 மணி நேரத்துக்கு பின்பே, தடயவியல் நிபுணர்கள் அப்பகுதிக்கு வந்ததாக, அப்பகுதியில் வசிக்கும் மக்கள் வேதனை தெரிவித்தனர்.
இதையும் படிங்க: செக் மோசடி வழக்கு: ராதிகாவுக்கு பிடிவாரண்ட்; சரத்குமார் எஸ்கேப்!