விருதுநகர் மாவட்டம் எரிச்சநத்தம் அருகே உள்ள அகதிகள் முகாமை சேர்ந்தவர் ஸ்ரீகாந்தன். அவரது மகன் திலகேஷ்வரன் (17) இவர் கடந்த சில நாட்களாக மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். எனவே அவரை மீட்டு விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீகாந்தன் கொண்டுவந்துள்ளார்.
ஆனால், இரண்டு தினங்களாக திலகேஷ்வரனுக்கு விருதுநகர் அரசு மருத்துவமனையில் சரியான மருத்துவ சிகிச்சை அளிக்கவில்லை எனவும், மேல் மருத்துவ சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்புமாறு திலகேஷ்வரன் தந்தை விருதுநகர் அரசு மருத்துவமனையை அணுகியபோது முறையான விளக்கம் அளிக்காமல் அவரை திருப்பி அனுப்பியதாகவும் தெரிகிறது.
அதைத் தொடர்ந்து இன்று மனநலம் பாதிக்கப்பட்ட திலகேஷ்வரன் அதிக மனஅழுத்தம் காரணமாக விருதுநகர் மருத்துவமனையில் கற்களை எடுத்து அனைவரின் மீதும் எறிந்துள்ளார்.
பின்னர், தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தைக்கு பின்பு மனநலம் பாதிக்கப்பட்டவரை மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனால் விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவமனையில் உள் நோயாளிகள், வெளி நோயாளிகள் மிகுந்த பதற்றத்துடன் காணப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.