விருதுநகர்: ராஜேந்திர பாலாஜி ஆவின் உள்ளிட்ட அரசுத் துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக்கூறி, மூன்று கோடி ரூபாய் மோசடி செய்ததாக விருதுநகர் மாவட்ட காவல் துறையினருக்குப் புகார்கள் குவிந்தன. அதனப்படிடையில் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த ராஜேந்திர பாலாஜியைத் தேடிவந்தனர்.
இந்நிலையில் நேற்று (ஜனவரி 5) கர்நாடக மாநிலம் ஹாசன் நகரில் தனிப்டை காவல் துறையினர் கைதுசெய்தனர். இதையடுத்து தமிழ்நாட்டிற்கு அழைத்துவந்து, இன்று (ஜனவரி 6) ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். ராஜேந்திர பாலாஜியை 15 நாள்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி பரம்வீர் உத்தரவிட்டார்.
பொய் வழக்கு
பின், நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளரிடம் பேசிய ராஜேந்திர பாலாஜியின் வழக்கறிஞர்கள் மாரீஸ்குமார், ஆனந்தகுமார் கூறுகையில், "உயர் நீதிமன்றம் ரத்துசெய்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் முன்பிணை மனு தாக்கல்செய்யப்பட்டுள்ளது. அந்த மனு இன்று விசாரணைக்கு வரவுள்ள நிலையில் ராஜேந்திர பாலாஜி கைதுசெய்யப்பட்டதால், முன்பிணை மனுவை, மனுவாகப் பரிசீலிக்க முயற்சி செய்துவருகிறோம்.
இந்த வழக்கு ராஜேந்திர பாலாஜி மீது திமுக அரசின் திட்டமிட்டு புனையப்பட்ட பொய் வழக்கு. இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளி விஜய் நல்லதம்பி, இதுவரை எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை. அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ராஜேந்திர பாலாஜி புகார்தாரர்கள் யாரிடமும் பணம் வாங்கவில்லை. இது பழிவாங்கும் நடவடிக்கை எனத் தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது.
கரை படியாத ராஜேந்திர பாலாஜி
அமைச்சர் செந்தில்பாலாஜி கையூட்டு வாங்கியதாகத் தொடரப்பட்ட வழக்கில் பணம் கொடுத்து சரிசெய்யப்பட்டுள்ளது. அவர் மீது எந்த நடவடிக்கையும் திமுக அரசு எடுக்கவில்லை. ராஜேந்திர பாலாஜி சுத்தமானவர். யாரிடமும் பணம் வாங்காத கரைபடியாத அமைச்சராக இருந்தவர். இவ்வழக்கில் ராஜேந்திர பாலாஜிக்கு எந்தச் சம்பந்தமும் இல்லை. விஜய் நல்லதம்பி பிடிபட்டால் மட்டுமே உண்மை தெரியவரும்.
முதன்முதலாக ராஜேந்திர பாலாஜி மீது புகார் கொடுத்த ரவீந்திரன் என்பவர், தான் அமைச்சரைப் பார்க்கவே இல்லை, விஜய் நல்லதம்பிதான் புகார் கொடுக்கச் சொன்னார் எனத் கூறியுள்ளார். இதிலிருந்தே இது பொய் வழக்கு என்று தெரிகிறது.
இந்த வழக்கு சம்பந்தமாக ராஜேந்திர பாலாஜியை மட்டும் கொடுமைப்படுத்தவில்லை. வழக்கறிஞராக எங்களையும் காவல் துறையினர் கொடுமைப்படுத்தினார்கள். வழக்கறிஞர்களின் மொத்த உரிமையையும் திமுக அரசு பறிக்க நினைக்கிறது. இது முழுக்க முழுக்க சர்வாதிகார ஆட்சி. வழக்கறிஞர்களை அவமதித்த காவல் துறை மீது பார் கவுன்சிலில் புகார் அளிக்கப்படும்" என்று கூறினர்.
இதையும் படிங்க: நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ராஜேந்திர பாலாஜி - அதிமுகவினர் மறியல்