விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர், அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் தொடர்மழை காரணமாக விவசாயிகளின் நீராதாரமாக விளங்கும் பிளவக்கல் பெரியாறு அணை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கண்மாய்களின் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக மலை அடிவாரத்திலுள்ள சிறு சிறு ஓடைகளில், நீர்வரத்து அளவுக்கு அதிகமாக வரத் தொடங்கியுள்ளது.
இதையடுத்து அங்குள்ள செண்பகத்தோப்பு பகுதியில் இருக்கும் பேச்சியம்மன் கோயிலில், சிற்றோடை என்ற பகுதியில் மாலை நேரத்தில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. காட்டுப்பகுதிக்குள் இருக்கும் இந்தக் கோயிலுக்கு வனத்துறையினரிடம் உரிய அனுமதி பெற்றே செல்ல வேண்டு.
தற்போது மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து தொடங்கியுள்ள நிலையில், பேச்சியம்மன் கோயிலுக்கு சென்ற பக்தர்கள் சிலர் ஓடையில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென மழை பெய்ததால் நீர்வரத்து அதிகமாகத் தொடங்கியது.
இந்த சூழ்நிலையில், பொதுமக்கள் ஒருவரையொருவர் கையை பிடித்துக்கொண்டு ஓடையில் இருந்து வெளியேறியுள்ளதாகத் தெரிகிறது. இதன் பின்னர் அவர்களை அழைத்து வந்த வாகனம் தாமதமாக செண்பகத்தோப்பு பகுதிக்கு வந்த காரணத்தினாலும், அந்தப் பகுதியில் செல்போன் நெட்வொர்க் இல்லாததாலும் அவர்கள் இரண்டு மணி நேரம் வாகனம் நிறுத்தும் இடத்திலேயே நின்றிருந்தனர்.
இதற்கிடையே பேச்சியம்மன் ஓடையில் நீர் வந்ததும், சாமி கும்பிட வந்தவர்கள் அப்பகுதியை விட்டு வெளியேறாமல் இருந்ததும் குறித்து வனத்துறையினருக்கு காலதாமதமாக தகவல் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அப்பகுதிக்கு வந்த வனத்துறையினர், அங்கிருந்த பொதுமக்களை எச்சரித்து இனிவரும் காலங்களில் அனுமதியின்றி பேச்சியம்மன் கோயிலுக்கு செல்லக்கூடாது என்று அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர். மேலும், திடீர் மழை பெய்த போதிலும் நீர்வரத்து கட்டுக்குள் இருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: சும்மா உட்காந்திருந்த மாணவனுக்கு நடந்த விபரீதம்: காவல் துறை விசாரணை!