விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தேவர்குளம் பஞ்சாயத்து பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (35). பட்டதாரி இளைஞரான கார்த்திகேயன், கணினி பயிற்சி மையம் நடத்தி வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிவகாசி தாலுகா அலுவலகத்தில் தனக்கும், தனது மனைவி சர்மிளாவுக்கும் சாதி, மதம் அற்றவர்கள் எனக் குறிப்பிட்டவாறு சான்றிதழ் வேண்டும் என்று விண்ணப்பம் செய்துள்ளார்.
இந்த விண்ணப்பத்தைப் பெற்ற அலுவலர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். காரணம், இதுவரை இப்படியான சான்றிதழை இந்த (சிவகாசி) தாலுகா அலுவலகத்தில் யாருக்கும் கொடுத்தது இல்லை. அதேநேரம் விண்ணப்பத்தாரர் காத்திகேயன், இதுவரை தமிழ்நாட்டில் 6 பேர் சாதி , மதம் அற்றோர் என சான்றிதழ் பெற்றவர்கள் என்று கூறியது மட்டுமில்லாமல் அதற்கான ஆதாரத்தையும் வழங்கியுள்ளார்.
பின்னர் சில நாட்கள் கழித்து அலுவலர்கள் உரிய விசாரணை நடத்தி கார்த்திகேயன் மற்றும் அவரது மனைவி சர்மிளா ஆகிய இருவருக்கும் சாதி, மதம் அற்றவர்கள் என்ற சான்றிதழை வழங்கியுள்ளனர். இது குறித்து கார்த்திகேயன் கூறுகையில், “எனது சொந்த ஊர் சிவகாசி தான். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னரே சாதி, மதம் அற்றவன் சான்றிதழ் கேட்டு மனு கொடுத்தேன். ஆனால் அப்போது இருந்த அலுவலர்கள் தர மறுத்து விட்டனர்.
பின்னர் சான்றிதழ் பெறத் தேவையான ஆதாரங்களை சேகரிக்க தொடங்கினேன். இணையத்தில் அதற்கான ஆதாரங்கள் கிடைத்தது. கடந்த 2018ஆம் ஆண்டில் வழக்கறிஞர் சினேகா என்பவர் இதே போன்ற சான்றிதழை பெற்றிருந்தார். இதனை ஆதாரமாக வைத்து தற்போது எனக்கும், எனது மனைவிக்கும் சாதி, மதம் அற்றவர்கள் என்ற சான்றிதழ் பெற்றுள்ளேன். நான் சுயமாக தொழில் செய்து வருகிறேன். எனது மனைவி சர்மிளா உதவி பேராசிரியரர்.
எங்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவர்களில் மூத்த மகனான நேசன் (4), தற்போது தனியார் பள்ளி ஒன்றில் யு.கே.ஜி. படித்து வருகிறான். அவனுக்கும் சாதி,மதம் அற்றவர் என்ற சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்திருக்கிறேன். மேலும் 2வது மகன் கரிகாலனுக்கு தற்போது 2 வயது தான் ஆகிறது. அவனுக்கும் இதே சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ளேன்” எனத் தெரிவித்தார்.
சாதி, மதம் அற்றவர்கள் என்ற சான்றிதழை பெற்ற கார்த்திகேயன் - சர்மிளா தம்பதியினருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
இதையும் படிங்க: மருத்துவர்கள் அலட்சியத்தால் சிசு இறப்பு - பாதிக்கப்பட்டவர் புகார்