விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இயங்கிவரும் பிரபல தனியார் கல்லூரியில், மாவட்டத்தைச் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து பல மாணவ, மாணவிகள் படித்துவருகின்றனர்.
இந்நிலையில், இன்று காலை மாணவ, மாணவிகளை ஏற்றிக்கொண்டு சென்ற அக்கல்லூரிப் பேருந்து திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதை சற்றும் எதிர்பார்க்காத மாணவ, மாணவியர் அலறி அடித்துக்கொண்டு அங்கும் இங்கும் ஓடினர். பேருந்து முழுவதும் புகை படர்ந்த நிலை காணப்பட்டது.
இதனால் மூன்று மாணவிகள் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். உடனடியாக விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து, மயக்கமடைந்த மாணவிகளை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.