விருதுநகர் மாவட்டம் காமராஜர் நினைவிடம் முன்பு மதுரை வில்லாபுரத்தைச் சேர்ந்த குருவையா என்பவரது மகன் அருண்குமார்(27). வலது கையில் மூன்று விரல்கள் குறைபாடுடைய மாற்றுத்திறனாளியான இவர், 2011இல் 12ஆம் வகுப்பு முடித்து மதுரை மருத்துவக் கல்லூரியில் லேப் டெக்னீசியன் படிப்பை முடித்துள்ளார்.
கடந்த 2018ஆம் ஆண்டு நீட் தேர்வு எழுதி 140 மதிப்பெண் பெற்றுள்ளார். இடுப்பிற்கு மேல் பகுதி மாற்றுத்திறனாளியாக இருப்பதால் அருண்குமார் மருத்துவம் படித்து முடித்து சிகிச்சை அளிக்க முடியாது எனக் கூறி மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீட்டில் அவருக்கு மருத்துவ படிப்பிற்கு இடம் மறுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து மதுரை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில், சென்னை மருத்துவக்கல்லூரி மண்டல மெடிக்கல் போர்டு, 2018ஆம் ஆண்டு அருண் குமாருக்கு உடல் சோதனை நடத்தி மருத்துவ படிப்பிற்கு தகுதியானவர் என சான்றிதழ் அளித்துள்ளது. ஆனாலும் மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்கவில்லை.
இது தொடர்பாக மதுரை ஆட்சியர், மாவட்ட மெடிக்கல் போர்டு உடல் சோதனை நடத்த உத்தரவிட்டுள்ளார். ஆனால் மாவட்டம் மெடிக்கல் போர்டு சோதனை செய்யாமலேயே மருத்துவம் படிக்க தகுதி இல்லாதவர் என சான்றிதழ் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து கடந்த மே மாதம் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் நீதிபதி சுவாமிநாதன் இரண்டு மருத்துவ குழுக்கள் முரண்பட்ட சான்றிதழ் அளித்து இருப்பதால் மருத்துவ கல்லூரி இயக்குநர், மெடிக்கல் போர்டு ஒன்றை அமைத்து புதிதாக சோதனை நடத்தி வரும் கல்வி ஆண்டில் மருத்துவ படிப்பில் அருண்குமார் சேர்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
அதைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக சென்னை மருத்துவக் கல்லூரி மண்டல மெடிக்கல் போர்டு அருண்குமாரை சோதனை நடத்தி மருத்துவ படிப்பிற்கு தகுதியானவர் என சான்று அளித்துள்ள நிலையில், மருத்துவக் கல்லூரி கவுன்சிலிங் பட்டியலில் அருண்குமாரின் என் இல்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் விருதுநகரில் காமராஜர் இல்லம் முன்பாக அமர்ந்து சான்றிதழ் ஒப்படைப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டவர் பின்பு விருதுநகர் பஜார் காவல் துறையினர் வேண்டுகோளை ஏற்று போராட்டத்தை கைவிட்டார். இது தொடர்பாக அரசு தலையிட்டு முறையான நடவடிக்கை எடுத்து தனக்கு மருத்துவப் படிப்பு பயில உதவி செய்ய வேண்டுமென அரசிற்கு கோரிக்கை வைத்துள்ளார்.
இதையும் படிங்க: ”தற்கொலை தீர்வல்ல!” - நீட் தேர்வெழுதும் மாணவர்களுக்கு வழிகாட்டுகிறார் அபிலாஷா