விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில், 43 அடி கொள்ளளவு கொண்ட சாஸ்தா கோவில் நீர்த்தேக்கம் அமைந்துள்ளது.
கடந்த சில தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் மழையினால் அணையில் நீர்மட்டம் 42 அடியை எட்டி உள்ளது. இந்த நீர்த்தேக்கத்திலிருந்து வெளியேறும் தண்ணீரைப் பயன்படுத்தி, 8 கண்மாயிகளுக்கு பாத்தியபட்ட 50 ஹெக்டர் விவசாய நிலங்கள் பயன்பெற்று வருகின்றன.
இந்தப் பகுதியில் தற்போது நெல் பயிரிடப்பட்டுள்ளதால், இந்த நேரத்தில் தண்ணீர் திறந்து விட்டால் விவசாயத்திற்கு போதுமானதாக இருக்கும்.
எனவே நீர்த்தேக்க அணையிலிருந்து உடனடியாக தண்ணீரை திறக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்ட தலைவர் ராமசந்திர ராஜா தலைமையில் 40க்கும் மேற்பட்ட விவசாயிகள், தேவதானம் கிராம நிர்வாக அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், தமிழ்நாடுஅரசு உரிய நடவடிக்கை எடுத்து காலம் தாழ்த்தாமல் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட்டு விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.