விருதுநகர்: சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை தொடர்பான விவகாரத்தில், சபாநாயகரை கண்டிக்கும் விதமான எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்பட அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் நேற்று (அக்.19) போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக, போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஈபிஎஸ் உள்பட அவரது ஆதரவு எம்எல்ஏக்களை போலீசார் கைது செய்ததோடு, அவர்களை ராஜரத்தினம் மைதானத்திற்கு கொண்டு சென்றனர்.
இவ்வாறு ஈபிஎஸ் கைதானதைக் கண்டித்து மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் அதிமுகவினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். அந்த வகையில், விருதுநகர் மாவட்டம் சிவகாசி பேருந்து நிலையம் முன்பு, அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தலைமையில் அதிமுகவினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து மறியலில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்த சிவகாசி காவல்துறையினர், அவர்களை தனியார் மண்டபத்துக்கு அழைத்துச் சென்றனர். இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கே.டி.ராஜேந்திர பாலாஜி, “ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சியை நசுக்கி விடலாம் என்ற ஆளும் கட்சியின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது.
எடப்பாடியார் அதிமுகவின் 3 வது அத்தியாயம். அதிமுகவின் வளர்ச்சியை முதலமைச்சரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதிமுவை அச்சுறுத்தும் விதமாக திட்டமிட்டு எடப்பாடியார் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டுள்ளார். எடப்பாடியார் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: ஈபிஎஸ் கைது: சேலத்தில் அதிமுகவினர் சாலை மறியல்...