விருதுநகர்: கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் ஏற்கனவே ஒதுக்கப்பட்ட 20 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் மறவர், வலையர், தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட 115 சாதியினருக்கு எதிராக வன்னியர் சமூகத்திற்கு மட்டும் 10.5 விழுக்காடு இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றது.
இந்நிலையில் வன்னியருக்கு ஒதுக்கப்பட்ட 10.5 விழுக்காடு இட ஒதுக்கீடு ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் நாளை (செப்.29) விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்திற்கு முன்னாள் முதலமைச்சரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வருகை தரவுள்ளார்.
இதனையடுத்து, “மறவர் கூட்டமைப்பு என்ற பெயரில் 115 சாதியினை வஞ்சித்து விட்டு ஒரு குறிப்பிட்ட சாதிக்கு மட்டும் இட ஒதுக்கீடு வழங்கிய எடப்பாடி எங்கள் ஊருக்கு வராதே” என்ற வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளது.
மேலும், விருதுநகர் நகர் பகுதி முழுவதும் குறிப்பாக நகைக்கடை பஜார் பெரிய கடை பஜார் பேருந்து நிலையம், எம்ஜிஆர் சிலை, கருமாதி மடம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் ஒட்டப்பட்டுள்ளது. இது அதிமுகவினரிடையே அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:முன்னாள் டிஜிபி திலகவதி மகன் மீது மருமகள் பரபரப்பு புகார்