விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சட்டப்பேரவை உறுப்பினராக திமுகவைச் சேர்ந்த தங்கபாண்டியன் உள்ளார். இவரது மகளுக்கு கடந்த 20 தினங்களுக்கு முன்பு ராஜபாளையம் நகரில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது.
கரோனா தொற்று காரணமாக தளவாய்புரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது. இந்தத் திருமணத்தில் வெளிமாவட்டங்களிலிருந்து பல அரசியல், முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
திருமணம் முடிந்தபிறகு மதுரையிலுள்ள மணமகன் வீட்டில் விசேஷங்கள் நடைபெற்றன. இந்த நிலையில் தங்கபாண்டியனுக்கு அவரது மனைவி கலாவதி, இரண்டு மகன்கள் ராமர், லட்சுமணனுக்கு கரோனா கண்டறிதல் சோதனை செய்ததில் தங்கப்பாண்டியனைத் தவிர மற்ற மூவருக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
தற்போது தங்கப்பாண்டியனின் குடியிருப்புப் பகுதியில் பேரூராட்சி நிர்வாகம் மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு அந்தப் பகுதியில் தடுப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. தங்கப்பாண்டியனுக்குச் சொந்தமாக உள்ள கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில் 100-க்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர்.
அந்த நிறுவனத்துக்கு அவரது இரண்டு மகன்களும் அடிக்கடி சென்றுவந்தது தெரியவந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அச்சத்தில் உள்ளனர்.
இதையடுத்து சுகாதாரத் துறையினர் 20 நாள்களுக்கு முன்னர் நடைபெற்ற திருமணத்தின் மூலம் தொற்று ஏற்பட்டுள்ளதா என்ற கோணத்தில் ஆய்வு செய்துவருகின்றனர். அதன்படி, அதில் கலந்துகொண்டவர்களுக்கு கரோனா கண்டறிதல் சோதனை செய்யப்பட்டுவருகிறது.
இதையும் படிங்க... சாத்தான்குளம் விவகாரம்: முதலமைச்சருக்கு ஸ்டாலின் கேள்வி!