விருதுநகர் மாவட்டம் திருச்சுழி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தங்கம் தென்னரசு நேற்று (மார்ச் 15) தனது வேட்புமனுவைத் தாக்கல்செய்தார்.
இவர் திருச்சுழி தொகுதி உருவாக்கத்திற்குப் பின்பு 2011, 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சரான இவர் தற்போது மூன்றாவது முறையாகவும் போட்டியிடுகிறார்.
தனது வேட்புமனுவைத் தேர்தல் நடத்தும் அலுவலர் கணேசனிடம் அளித்துவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், "திமுக தலைவர் ஸ்டாலின் திருச்சுழி தொகுதியில் போட்டியிட எனக்கு மீண்டும் வாய்ப்பு கொடுத்துள்ளார். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சியின் தலைவர்கள் ஆதரவோடு திருச்சுழி தாலுகா அலுவலகத்தில் வேட்புமனுவைத் தாக்கல்செய்துள்ளேன்.

திருச்சுழி தொகுதி மக்கள் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் என்னை வெற்றிபெறச் செய்து சட்டப்பேரவைக்கு அனுப்புவார்கள். கடந்த பத்தாண்டுகளாகத் தள்ளாடும் தமிழ்நாட்டை ஸ்டாலின் முதலமைச்சராக்கித் தூக்கி நிறுத்துவார். ஆளும் கட்சி புறக்கணித்த நிலையிலும் இத்தொகுதி மக்களுக்குத் தேவையான நலத்திட்டங்களை இயன்றவரை செய்துள்ளேன்" என்றார்.

இதன் தொடர்ச்சியாக, விருதுநகர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஏ.ஆர்.ஆர். சீனிவாசன், விருதுநகர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அலுவலர் சந்தான லட்சுமியிடம் தனது வேட்புமனுவைத் தாக்கல்செய்தார்.
ஏற்கனவே 2011இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் இவர் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார். தற்போது இரண்டாவது முறையாக இந்தத் தொகுதியில் போட்டியிடுகிறார்.