மணப்பாறையை அடுத்த சங்கிப்பட்டியைச் சேர்ந்தவர், பழனியம்மாள்(65). தனது மகன் ராஜாவுடன் அத்தியாவசியப் பொருட்களை வாங்கிக் கொண்டு, இருசக்கர வாகனத்தில் சென்றபோது, புதுக்காலணி அருகே டிராக்டர் மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இறந்த பழனியம்மாளின் உடலை மீட்க வந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர், உடலை ஸ்ட்ரெச்சரில் ஏற்றி வைத்து காவல் துறையினருக்காக காத்திருந்தனர்.
அதுசமயம் அருகிலேயே மற்றொரு விபத்து ஏற்பட்டதால், அங்கு காயமடைந்தவரையும் நாமே எடுத்துச் செல்ல வேண்டும் என இறந்த உடலை ஸ்ட்ரெச்சரில் விட்டுவிட்டு காயமடைந்த நபரை ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்குச் சென்றனர்.
இந்நிலையில், தகவலறிந்து நிகழ்விடத்துக்கு வந்த காவல் துறையினர் மற்றொரு ஆம்புலன்ஸிற்குத் தகவல் அளிக்கவே, அங்கு வந்த இரண்டாவது ஆம்புலன்ஸ் இறந்த உடலை தங்களது ஸ்ட்ரெச்சரில் மாற்றி எடுத்துக்கொண்டு கிளம்ப முயற்சித்தது. அதேசமயம் அங்கு வந்த முதாலவது ஆம்புலன்ஸ் ஓட்டுநர், 'உடலை நாங்கள் தான் எடுத்து வைத்துவிட்டுச் சென்றோம். எனவே, உடலை எங்கள் ஆம்புலன்ஸில் தான் கொண்டு செல்லுவோம்' என வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.
இதில் இரு ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதற்கு காவல் துறையினரும், அருகில் இருந்தவர்களும் சமரசம் செய்து அனுப்பினர். ஆம்புலன்ஸ் மூலம் பழனியம்மாள் உடல் உடற்கூராய்விற்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.