விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள முத்தார்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கந்தசாமி என்ற விவசாயியின் மகள் நல்லம்மாள் (20). மாற்றுத்திறனாளியான இவர் தனது தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது தோட்டத்தின் அருகே உள்ள கிணற்றில் தவறி விழுந்துள்ளார்.
நல்லம்மாளின் சத்தம் கேட்டு ஓடிவந்து பார்த்த அக்கம்பக்கத்தினர் கிணற்றில் இறங்க வசதி இல்லாததால் யாரும் காப்பாற்ற முடியவில்லை. இந்நிலையில், சிறிது நேரத்தில் மூச்சு திணறி நல்லம்மாள் உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பாக தீயணைப்பு துறையினருக்கும் காவல் துறையினருக்கும் அங்கிருந்தவர்கள் தகவல் கொடுத்துள்ளனர்.
இந்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறை வீரர்கள் கிணற்றிலிருந்து நல்லம்மாளின் உடலை மீட்டனர்.
இதையடுத்து காவல்துறையினர் நல்லம்மாளின் உடலை சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.