விருதுநகரில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைக்க மத்திய அரசுக்கு, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி பரிந்துரை செய்தது. தற்போது மத்திய அரசு அதற்கு அனுமதி அளித்ததையடுத்து, விருதுநகரில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தொடங்க மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் 28 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. இதில், அரசு பல் மருத்துவக் கல்லூரி, கூடுதல் சிறப்பு சிகிச்சைப் பிரிவு, கூடுதல் மருத்துவ வசதிகள் உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட உள்ளன.
இந்நிலையில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தில், பழுதடைந்த வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் உள்ளன. இதனை ஜேசிபி, பொக்லைன் இயந்திரங்கள் மூலம் இடிக்கும் பணி நடைபெற்றது. மேலும், மருத்துவமனை கட்டுமானப் பணிக்காக அளவீடு செய்யப்பட்ட இடம் சுத்தப்படுத்தப்பட்டுவருகிறது.
பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டுமானத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளதாகவும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் கட்டுமானப் பணிகளை தொடங்கிவைக்க உள்ளதாகவும் மாவட்ட அலுவலர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: கொரோனா வைரஸ் குறித்து ஆய்வு - அரசு மருத்துவமனைகளில் மத்திய குழு