விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலைகளில் ஏற்படும் வெடி விபத்துக்களைக் குறைப்பது மற்றும் அரசு விதிமுறைகளுக்குட்பட்டு பட்டாசு உற்பத்தி செய்யப்படுவதை உறுதி செய்வது தொடர்பாக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பட்டாசு உற்பத்தியாளர் சங்கங்களைச் சேர்ந்தவர்களுடன் மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பட்டாசு உற்பத்தி ஆலைகளில் நடைபெறும் விபத்துகளைத் தவிர்ப்பது தொடர்பாக பின்பற்றப்படவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தால் விபத்துக்களை குறைக்க எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி விரிவாக எடுத்துரைத்தார்.
பட்டாசு ஆலைகளை ஆய்வு செய்ய சிறப்பு ஆய்வுக் குழுக்களைத் தவிர்த்து மாவட்ட அளவிலான உயர் அலுவலர்களால் பட்டாசு தொழிற்சாலைகளில் திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் எனவும் உயர் அலுவலர்கள் மற்றும் சிறப்பு ஆய்வுக் குழுக்கள் ஆய்வு செய்யும்பொழுது, அதிகப்படியான பணியாளர்கள், அதிகளவிலான வெடி பொருட்கள் இருப்பு வைத்தல் மற்றும் தயாரித்தல் மற்றும் உள்குத்தகை போன்ற மிகக் கடுமையான விதிமீறல்களில் ஈடுபடக்கூடாது.
பொதுமக்களின் உயிர் மற்றும் உடைமைக்கு பெரும் அச்சுறுத்தல் இருப்பதாகக் கருதி இந்திய தண்டனைச் சட்டம், பிரிவு 304-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும் எனவும், மேலும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் சட்டவிரோதமாக வீடுகளிலும், அனுமதி பெறாத இடங்களிலும் கருந்திரி உள்ளிட்ட இதர பட்டாசுகள் தயாரிப்பது கண்டறியப்பட்டால், அவர்கள் மீதும் மிகக் கடுமையான குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
மேலும், பட்டாசு ஆலைகளில் விபத்து ஏற்படுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் அனைத்து பட்டாசு தொழிற் சாலைகளில் பணிபுரியும் போர்மேன், மேலாளர் மற்றும் ரசாயனக் கலவைப் பணிகளில் ஈடுபடுவோர் ஆகியோருக்கு சிவகாசி தொழிலகப் பாதுகாப்பு பயிற்சி மையத்தின் சார்பாக பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. மேற்படி பயிற்சி நடவடிக்கைகளை முழுமைப்படுத்தும் நோக்கில், குறுகிய காலத்தில் அனைத்து தொழிற்சாலைகளுக்கும் பயிற்சி கால அட்டவணை தயார் செய்யப்பட்டு முன் கூட்டியே அறிவிப்பு செய்யப்படும்.
மேற்படி பயிற்சியில் கலந்துகொள்ளாத தொழிற்சாலைகளின் மீது உரிய விதிமுறைகளின்படி கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும், ஆதலால் வெடி விபத்துகளைத் தவிர்க்க ஆலை உரிமையாளர்கள் அனைவரும் உரிய விதிமுறைகளை கட்டாயம் பின்பற்றி, பாதுகாப்பான முறையில் தொழில் செய்து, விபத்தில்லா விருதுநகரை உருவாக்க மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: லால்குடி குழந்தை விற்பனையும், 6000 கி.மீ பயணமும்.. சினிமாவை விஞ்சிய பகீர் சம்பவம்!