உலகளாவிய பெருந்தொற்றான கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில் மே 17ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி, தமிழ்நாடு முழுவதும் உள்ள மதுபானக் கடைகள், விடுதிகள், பார்கள், அனைத்தும் தற்காலிகமாக மூடப்பட்டன.
தடை காரணமாக, கடந்த 25ஆம் தேதியிலிருந்து மதுப்பிரியர்கள் குடிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் பலர் தடை செய்யப்பட்ட குட்கா, பான்பராக் உள்ளிட்ட புகையிலைப் பொருள்களை அமோகமாக விற்பனை செய்யத் தொடங்கியுள்ளனர். போதை பிரியர்களிடையே தடைசெய்யப்பட்ட குட்கா, பான்பராக், பான்மசாலா, புகையிலைப் பொருள்கள் பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் காதிபோர்டு பகுதியில் நவநீத கிருஷ்ணன் என்பவர் நடத்திவரும் பெட்டிக்கடை ஒன்றில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து பன்மடங்கு லாபத்தில் விற்பனை செய்வதாக உணவுப் பொருள்கள் பாதுகாப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இந்தத் தகவலின் அடிப்படையில், உணவு பாதுகாப்பு துறையினர், வேளாண்மை துறையினர், தோட்டக்கலை துறையினர், வருவாய்த்துறையினர், காவல்துறையினர் அடங்கிய குழுவினர்கள் பெட்டிக்கடையில் ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின்போது ஹான்ஸ், பான்பராக் உள்ளிட்ட பல்வேறு வகையான தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் அங்கே விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அந்த புகையிலைப் பொருள்களை கைப்பற்றிய அலுவலர்கள், அவற்றை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக பெட்டிக்கடையின் உரிமையாளர் நவநீத கிருஷ்ணன் மீது வழக்கு பதிந்து கைது செய்த நகர காவல்துறையினர், அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க : டிப்ளமோ படித்துவிட்டு மருத்துவம்: போலி டாக்டர் கைது!