தமிழ்நாட்டில், வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதன்காரணமாக மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர் மழை பெய்துவருகிறது. இந்நிலையில், கடந்த சில தினங்களாக விருதுநகரில் தொடர் கனமழை பெய்துவருகிறது. இதன் காரணமாக நேற்று மதுரையில் இருந்து கன்னியாகுமரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் ஆர்.ஆர் நகர் பகுதியில் உள்ள மேம்பாலத்தின் பக்கவாட்டு சுவர்கள் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
2008ஆம் ஆண்டு இன்டர் லாக் எனப்படும் அமெரிக்கா தொழில் நுட்பத்தில் சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இந்தப் பாலத்தின் பக்கவாட்டு சுவர்கள் இடிந்து விழுந்தது. இந்நிலையில், மழையின் காரணமாக இடிந்து விழுந்த மேம்பாலத்தின் பக்கவாட்டு சுவர்களை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கண்ணன் ஆய்வுசெய்தார். மேலும் இது குறித்து ரயில்வே துறை அலுவலர்களிடம் ஆலோசனை நடத்தினார்.