விருதுநகர் மாவட்டம் ரோசல்பட்டி அருகே ஜக்கம்மாள்புரம் தெருவில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வசிப்பவர்கள் பெரும்பாலும் ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியாளர்களாக வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியில் கழிப்பிட வசதி இல்லாமல் ஊரின் ஒதுக்குப் புறங்களில் உள்ள காட்டுப் பகுதியிலேயே கழிப்பிடங்களாக பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தற்போது அப்பகுதி முழுவதும் வீட்டு மனைகளாக மாற்றப்பட்டு வருவதன் காரணமாக கழிப்பிட வசதியில்லாமல் மிகுந்த அளவில் சிரமப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “நாங்கள் வசித்து வரும் பகுதியில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் மிகுந்த அளவில் சிரமப்பட்டு வருகிறோம். பள்ளி, கல்லூரி செல்லும் பெண்கள் முதல் வயதான பெண்கள் வரை அனைவரும் கழிப்பிடங்கள் இல்லாமல் ஊருக்கு ஒதுக்குப்புறமான பகுதியை கழிப்பிடமாக பயன்படுத்தி வருகிறோம்.
தற்போது அந்தப் பகுதியில் வீட்டுமனை பட்டாவாக மாற்றப்பட்டுள்ளது. இதன் காரணமாக மிகுந்த அளவில் சிரமப்பட்டு வருகிறோம். எனவே மாவட்ட நிர்வாகம் அல்லது நகராட்சி சார்பில் பொது கழிப்பிட வசதி, ஏனைய அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: குழந்தையை கள்ளிப்பால் கொடுத்து கொன்ற பாட்டிக்கு பிணை!