விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே முத்தார்பட்டி கிராமத்தில் உள்ள நியாயவிலைக்கடையில் கரோனா நிவாரண 2ஆவது தவணை ரூ.2000, 14 வகையான மளிகைப் பொருள்கள் அடங்கிய நிவாரணத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தொடங்கிவைத்தார்.
பின்னர் அருகிலுள்ள தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற கரோனா தடுப்பு ஊசி முகாமினை ஆய்வுசெய்தார். இம்முகாமில் கிராமத்தில் உள்ள சுமார் 220 நபர்களுக்கு கரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக நூறு நாள் வேலைத் திட்டத்தில் பணிபுரியும் பெண்களிடம் 100 நாள் வேலைத்திட்டத்தில் செயல்பாடு, குறைகளைக் கேட்டறிந்தார்.
முத்தார்பட்டியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றன. இங்கு உள்ள நியாயவிலைக் கடையில் தமிழ்நாடு அரசு வழங்கும் கரோனா 2ஆம் தவணை நிவாரணத் தொகையான ரூ.2000, தமிழ்நாடு அரசு வழங்கும் 14 வகையான மளிகைப் பொருள்கள் அடங்கிய உணவுப் பொருள்களின் தொகுப்பினை பயனாளிகளுக்கு வழங்கினார்.
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், "இதுவரை விருதுநகர் மாவட்டத்தில் மூன்று லட்சத்து 50 ஆயிரம் நபர்களுக்கு கரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டுள்ளது.
மக்களின் தேவைக்கு ஏற்ப தடுப்பூசிகள் வரவழைக்கப்பட்டு தினமும் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுவருகிறது. பின்னர் இப்பகுதிகள் தேவையான தடுப்பூசிகளை கேட்டு வரவேற்கின்றோம்.
தட்டுப்பாடு இல்லாத நிலையில் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டுவருகிறது. மேலும் இதற்கு முன்னால் பொதுமக்கள் தடுப்பூசி என்றால் ஒருவகை அச்சத்துடன் இருந்துவந்த நிலை மாறி தற்போது தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆர்வத்துடன் வந்து செலுத்திக்கொள்கின்றனர்" என்றார்.
பின்னர் முதலமைச்சரின் டெல்லி பயணம் பற்றிய அதிமுகவினர் கருத்திற்கு, அதிமுகவினர் பெரும் குழப்பத்தில் இருந்துவருவதாகத் தெரிவித்தார்.