விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மல்லியைச் சேர்ந்தவர் மாதவன் - பெத்தலின், தம்பதியினர். இவர்களுக்கு யவனம் (25) என்ற மகள் உண்டு. இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவரது உறவினரான பவித்ரன் கோவையில் வசித்து வருகிறார். இந்நிலையில் யவனத்தை இரண்டு மூன்று தடவை பெண்கேட்டு, பவித்ரன் அவரது வீட்டுக்குச் சென்றுள்ளார்.
ஆனால், மாதவன் - பெத்தலின் தம்பதியினர் பெண் கொடுக்க மறுத்த நிலையில், இன்று பவித்ரன் அவரது தம்பி வெங்கடேசன், அவரது உறவுக்கார பெண் மற்றும் இருவர் என 5 பேர் கூட்டு சேர்ந்து, மல்லிப்பகுதியில் உள்ள இளம் பெண் வீட்டிற்குச் சென்று, பெண்ணைக் கடத்த முயற்சி செய்துள்ளனர். அப்பொழுது இளம் பெண்ணின் தாய் பெத்தலின், அவருடைய சகோதரி ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தடுத்துள்ளனர்.
இவர்களை அடித்துக் கீழே தள்ளி விட்டு, பவித்ரன் மற்றும் வெங்கடேசன் இளம்பெண்ணை இரு சக்கர வாகனத்தில் வலுக்கட்டாயமாக ஏற்றிச் சென்றுள்ளார். அப்போது இருசக்கரவாகனம் சிவகாசி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும்போது, இளம்பெண் இரு சக்கர வாகனத்தில் இருந்து கீழே குதித்துள்ளார். இதில் படுகாயமடைந்த இளம்பெண்ணை அவர்கள் தயாராக வைத்திருந்த காரில் ஏற்றி, மீண்டும் கடத்திச் சென்றுள்ளனர்.
இதையடுத்து பெண்ணின் பெற்றோர் விருதுநகர் காவல் துறை கண்காணிப்பாளரை தொடர்பு கொண்டு பெண் கடத்தப்பட்ட விஷயத்தையும், கடத்தியவர்களின் விவரத்தையும் கொடுத்துள்ளனர். இதையடுத்து கடத்தலில் ஈடுபட்டவர்களின் செல்போன்களை டிராக் செய்த காவல் துறையினர், அவர்கள் இருக்குமிடத்தை கண்டறிந்தனர்.
இதனையடுத்து ராஜபாளையம் பகுதியில் பெண்ணை மறைத்து வைத்திருந்த கடத்தல் கும்பல், கேரளாவிற்கு தப்பி செல்லமுற்பட்டபோது, காவல் துறையினரிடம் சிக்கினர். இதையடுத்து இளம்பெண்ணை மீட்ட காவல் துறையினர் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சையளித்தனர்.
பிறகு, கடத்தலில் ஈடுபட்ட பவித்ரன், வெங்கடேசன் உள்ளிட்ட ஐந்து பேரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இக்கடத்தலில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் காவல் துறையினர் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
இதையும் படிங்க:பாம்பை வைத்து மனைவியைக் கொன்றவரிடம் தீவிர விசாரணை!