விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள மகராஜபுரத்தில் 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் பொது மக்கள் பயன்படுத்தி வரும் பொதுக்கண்மாய் உள்ளது.
இந்த கண்மாயை ஒரு சிலர் ஆக்கிரமிக்கும் நோக்கில் மணல், கற்களை கண்மாயின் உட்பகுதியில் கொட்டி வருவதாகத் தெரிகிறது. இந்நிலையில், அப்பகுதி மக்கள் இது குறித்து கேட்டதற்கு மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

பின்னர் இது குறித்து பொதுமக்கள் வத்திராயிருப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் காவல்துறையினர் மிரட்டியவர்களை மணல் கொட்டுவதை நிறுத்துமாறு எச்சரித்தனர். ஆனால் அந்த ஆக்கிரமிப்பாளர்கள் தொடர்ந்து மணல் கொட்டி வருவதாகத் தெரிகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், மாவட்ட நிர்வாகம் ஆக்கிரமிப்பாளர்களை தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி மாவட்ட ஆட்சியார் சிவஞானத்திடம் கோரிக்கை மனு அளித்தனர்.