விருதுநகர் அருகே அழகாபுரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று காலை தண்ணீருக்காக கிணறு மோட்டாரை ஆன் செய்தபோது எதிர்பாராதவிதமாக மின்கசிவு ஏற்பட்டது. அப்போது மோட்டார் அறையின் அருகே இருந்த பழைய அட்டைப் பெட்டிகள் மின்கசிவில் தீப்பற்றியது.
அந்தத் தீ, மருந்துகள் சேமித்துவைக்கும் இருப்பு அறைக்குப் பரவியது. இது குறித்து மருத்துவ ஊழியர்கள் விருதுநகர் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது எனத் தெரியவந்துள்ளது. மேலும் இந்தத் தீ விபத்தால் 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மருந்துப் பொருள்கள் நாசமடைந்ததாகக் கூறப்படுகிறது.
முழுமையான விசாரணைக்குப் பின் மொத்த பாதிப்பின் மதிப்பு தெரியவரும் என காவல் துறையினரின் விசாரணையில் தெரிவித்துள்ளனர். மேலும் தீயணைப்புத் துறையினர் விரைவாகச் செயல்பட்டதால் பாதிப்புகள் அதிகம் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.